2021 ஆண்கள் டி-20 உலக் கிண்ணம் நிச்சயம் இந்தியாவில் நடைபெறும் என ஐ.சி.சி. செயல் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் அலார்டிஸ் தெரிவித்துள்ளார்.

7 ஆவது டி-20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டி இந்தியாவில் எதிர்வரும் ஒக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. புதிய நோயாளர்களின் அன்றாட அடையாளம் ஒரு இலட்சத்தை கடந்துள்ளமையினால் டி-20 உலக கிண்ண போட்டி திட்டமிட்டபடி நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இது குறித்து சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தின் செயல் தலைமை நிர்வாக அதிகாரி புதன்கிழமை ஊடகங்களிடம் பேசியபோது,

டி-20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை திட்டமிட்டபடி இந்தியாவில் நடத்துவதற்கான வேலைகளை தொடங்குகிறோம். இந்தியாவில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அதற்கு மாற்று திட்டத்தையும் கைவசம் வைத்துள்ளோம். ஆனால் மாற்றுத்திட்டம் குறித்து நாங்கள் இன்னும் எதுவும் விவாதிக்கவில்லை. 

இந்திய கிரிக்கெட் நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். அதற்குரிய நேரம் வரும் போது மாற்று திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கையில் இறங்குவோம். இதற்கு என்று காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கவில்லை. 

உலக கிண்ண போட்டிக்கு இன்னும் பல மாதங்கள் உள்ளன. அதற்குள் சூழ்நிலை எப்படி இருக்கிறது, ஏனைய போட்டிகள் எல்லாம் எப்படி நடக்கின்றன என்பதை பார்ப்போம் என்றும் அவர் கூறினார்.