(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டில் ஒரு இனத்தை மாத்திரம் இலக்குவைத்து அடக்க முற்படக்கூடாது. இஸ்லாத்துக்கு எதிராக ஒருசில மதகுருமார்கள் செயற்படுகின்றார்கள். அவர்களை கட்டுப்படுத்த தவறினால் அதுவே நாட்டில் இடம்பெறும் பேரழிவுகளுக்கு காரணமாக அமையலாம் என ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மீதான நான்காவது நாள் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டிலே ஒரு இனத்தை மையப்படுத்தி அவர்களை அடக்க நினைக்கக்கூடாது. நாட்டின் மீது பாசம்கொண்டு செயற்படவேண்டும். சுதந்திரம் கிடைத்து 70 வருடங்களுக்குள் 30 வருடங்கள் தமிழ் மக்களுடன் போராட்டம் இடம்பெற்றது. யுத்தம் முடிவடைந்து 10 வருடத்துக்குள்ளேயே முஸ்லிம்களின் மீது திகன, தம்புள்ள, அளுத்கம, காலி என அனைத்து பிரதேசங்களிலும் தாக்கினார்கள். 

ஞானசார தேரர் தெரிவித்த (அபசரணய்) என்ற வசனம் கொலை செய்யுங்கள் என்ற கருத்துக்கு சமமானதாகும். அந்த வசனத்தை தெரிவித்த பின்னரே அளுத்கமவில் முஸ்லிம்கள் மீதும், முஸ்லிம்களின் சொத்துக்கள் மூது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் 4 பேர் கொள்ளப்பட்டார்கள் நூற்றுக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டன. 

அத்துடன் சஹ்ரான் கூட்டம் நாட்டில் மேற்கொண்ட தாக்குதலை நாங்கள் அனுமதிப்பதில்லை. ஆனால் அவர்கள் இதனை ஏன் செய்தார்கள் என்பது தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதனால் அந்த விடயஙகளை கவனத்தில் கொண்டு நாட்டில் அவ்வாறான அநியாயங்கள் இடம்பெறாமல், இஸ்லாத்துக்கு எதிராக ஒருசில மதகுருமார்கள் செயற்படுகின்றார்கள். இவர்கள் அனைவரும் தரகர்கள். கூலிப்படைகள். இவர்கள்தான் இந்த நாட்டை குட்டிச்சுவராக்குகிறார்கள். 

எனவே இவ்வாறான மத குருமார்களை கட்டுப்படுத்தவேண்டும். இவர்களை கடுப்படுத்த தவறினால், இவ்வாறான இன்னல்கள் அழிவுகள் வருவதற்கு அது காரணமாக அமைந்துவிடும். அதனால் அவ்வாறான அழிவுகள் வரக்கூடாது. அதற்கான முழு ஒத்துழைப்பையும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் தருவதற்கு தயாராக இருக்கின்றது. எந்த அரசாங்கம் இருந்தாலும் அந்த அரசாங்கத்துக்கு எமது ஒத்துழைப்பு வழங்குவோம். அதேபோன்று தாக்குதல் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவேண்டும். அதேபோன்று இதனுடன் தொடர்புபட்டவர்கள் என தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அப்பாவிகளை விடுவிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும் ஏப்ரல் தாக்குதல்தொடர்புபட்டவர் என தெரிவித்து இலங்கை ஜமாத்தே இஸ்லாமிய அமைப்பின் முன்னாள் தலைவர் ஹஜ்ஜுல் அக்பரை கைது செய்திருக்கின்றார்கள்.  ஜமாத்தே இஸ்லாமி என்பது இலங்கையில் பெரும் இயக்கமாக நாட்டில் பல நல்ல பணிகளை செய்திருக்கின்றது. அந்த அமைப்பில் இருந்து விலக்கப்பட்டவர்கள் சஹ்ரானின் குழுவுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றார்களே தவிர, தற்போது இந்த அமைப்பில் இருப்பவர்கள் யாரும் சம்பந்தப்படவில்லை. ஹஜ்ஜுல் அக்பர் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களுக்கான பதிலை அவர் வெளியிட்டிருக்கின்றார் என்றார்.