அரசியல் ஆலோசனைப் பொறிமுறையொன்றை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் வெளிவிவகார வெளிவிகார அமைச்சுகள் நேற்றைய தினம் கையெழுத்திட்டுள்ளன.

இரு தெற்காசிய நாடுகளுக்கிடையிலான வழக்கமான ஈடுபாடு மற்றும் கூட்டாண்மைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன கைச்சாத்திட்டதுடன், கொழும்பிலுள்ள ஆப்கானிஸ்தான் தூதுவர் அஷ்ரப் ஹைதரி ஆப்கான் அரசாங்கத்தின் சார்பில் கைச்சாத்திட்டார்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இரு வெளிநாட்டு அமைச்சுக்களினதும் ஆக்கபூர்வமான வசதியளித்தல்களின் மூலம் இலங்கை - ஆப்கானிஸ்தான் இருதரப்புப் பங்காண்மையானது மேலும் வளர்ச்சியடையும் ஆதலால், இருதரப்பு உறவுகளின் முழுமையான வரம்புகளை வருடாந்த அடிப்படையில் மீளாய்வு செய்ய முடியும் என இரு நாடுகளும் தமது நம்பிக்கையை வெளிப்படுத்தின.

அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, கலாச்சாரம், சுகாதாரம், சமூகம், மக்களுக்கிடையிலான தொடர்புகள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு உட்பட பொதுவான நலன்களின் ஏனைய பகுதிகளை இது உள்ளடக்கும்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதன் மூலம், அரசியல் ஆலோசனைகள் அல்லது வெளிநாட்டு அலுவலக ஆலோசனைகளின் இருதரப்பு ஆவணங்களை தெற்காசியப் பிராந்தியத்தின் அனைத்து நாடுகளுடனும் நிறுவுவதை இலங்கை நிறைவு செய்கின்றது. கைச்சாத்திடப்பட்ட இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான 63 ஆண்டுகால முறையான இராஜதந்திர உறவுகளின் வரலாற்றில் ஒரு முக்கியமான இருதரப்பு ஆவணமாகும்.

இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் அரசியல் ஆலோசனைகளின் அங்குரார்ப்பண அமர்வை பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய நேரத்தில் நடாத்துவதற்கும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். பொருளாதார மற்றும் வர்த்தக விடயங்களிலான நெருக்கமான ஒத்துழைப்பு மற்றும், அண்டை நாடுகள் மற்றும் சார்க் உறுப்பினர்களுடனான தொடர்பு ஆகியன இலங்கையின் முன்னணிப் பொருளாதார இராஜதந்திர இலக்காக உள்ளது.

தேயிலை, இரத்தினம் மற்றும் ஆபரணங்கள், உலர் பழங்கள், விதைகள் மற்றும் தானியங்கள் உள்ளிட்ட இருதரப்பு வர்த்தகத்திற்கான உயர் சாத்தியம் மிகுந்த பகுதிகளை இரு தரப்பினரும் அடிக்கோடிட்டுக் காட்டியதுடன், நேரடி விமான இணைப்பானது இரு நாடுகளுக்குமிடையிலான சுற்றுலா, கலாச்சார மற்றும் சமூக ஈடுபாடுகளில் நெருக்கமான ஒத்துழைப்பை ஏற்படுத்தும் என்பதை சுட்டிக் காட்டினர்.

பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே மற்றும் கொழும்பில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் மற்றும் வெளிநாட்டு அமைச்சின் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.