ஊர்காவல்துறை பிரதான சாலையில் இயங்கி வந்த மதுபானசாலை தீவக பொது அமைப்புக்களின்  எதிர்ப்பையடுத்து 2016 ஆம் ஆண்டு மூடப்பட்டது.

அதனை மீண்டும்  அரசியல்வாதிகளின் செல்வாக்கோடு அமைப்பதற்கான முயற்சியில் பலர் ஈடுபடுவதாக  அறியவருகிறது.

இது தொடர்பாகத் தீவகம் வடக்குப் பிரதேச செயலாளரினால்  மூடப்பட்ட மதுபான நிலையத்தை சுருவில் வீதி ஊர்காவற்துறை எனும் முகவரியைக் கொண்ட காணியினைத் தெரிவு செய்துள்ளதாகவும் எனவே அதற்கான அனுமதியினை  வழங்குவது தொடர்பாகப் பிரதேசப் பொது  மக்களின்  கருத்துக்களை  14 நாட்களுக்குள்  கிராம உத்தியோகத்தர்  ஊடாக எமக்குத் அறியத் தருமாறு கேட்டுள்ளார்.

ஊர்காவற்றுறை பிரதேசத்தில் அதிகரித்த வறுமை, குடும்ப வன்முறை, கோஷ்டி மோதல்கள், வன்முறைகளை அடுத்தே பொது அமைப்புக்களின் முயற்சியால் கடந்த 2016 இல் மதுபானசாலை மூடப்பட்ட நிலையில் மீண்டும் திறப்பது தற்போது வீழ்ச்சி கண்டிருக்கும் சமூகப் பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்க வழிவகுக்கும்.

இந்நிலையில் அரசியல்வாதிகளின் ஆதரவோடு மீண்டும் ஆரம்பிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த 8 ஆம் திகதி தீவாக பொது அமைப்புக்கள் பொதுமக்கள் இணைந்து  காலை 10 மணியளவில் ஊர்காவற்துறை பிரதேச செயலகம் முன்றலில் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டத்தில் மக்கள் நலனில் அக்கறை கொண்ட பொதுஅமைப்புக்கள், பொதுமக்கள் அனைவரையும்  பங்குபற்றுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.