(எம்.மனோசித்ரா)

மாகாணசபைத் தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலான தீர்மானங்கள் எடுக்கப்படும்.

சுதந்திர கட்சியின் 160 ஒருங்கிணைப்பாளர்கள், 1064 பிரேதசசபை உறுப்பினர்கள், 5025 வேட்பாளர்கள் தொடர்பில் சிந்தித்து கலந்துரையாடல்களின் பின்னர் சிறந்த தீர்மானம் எடுக்கப்படும் என்று சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் குறித்த கருத்துக்கள் கூட்டணிக்கு பாதகமில்லை : தயாசிறி  ஜயசேகர | Virakesari.lk

புதிய அரசியலமைப்பிற்கான சுதந்திர கட்சியின் பரிந்துரைகளை மீரிகம ராமான்ய பீடத்தின் மகாநாயக்க மகுலேவ விமல தேரரிடம் கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

தற்போது கட்சியில் உள்ள உறுப்பினர்களுடன் இணைந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவே எதிர்பார்த்துள்ளோம்.

இரு தினங்கள் கட்சியின் மத்திய குழு கூடியது. அதன் போது கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

அதற்கமைய கட்சியில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் , எடுக்கப்பட வேண்டிய அரசியல் ரீதியான தீர்மானங்கள் உள்ளிட்டவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அத்தோடு புதிய மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தையும் உருவாக்கியுள்ளோம். அதனை முன்னெடுத்துச் செல்வதே எமது எதிர்பார்ப்பாகும்.

தற்போதும் நாம் பொதுஜன பெரமுனவுடனான கூட்டணியிலேயே இருக்கின்றோம். எதிர்காலத்தில் எவ்வாறு முன்னோக்கிச் செல்வது என்பது தொடர்பில் தீர்மானிக்க வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு அநீதியிழைக்காத வேலைத்திட்டங்களையே நாம் முன்னெடுப்போம்.

சுதந்திர கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் 160 பேர் உள்ளனர். 1064 பிரேதசசபை உறுப்பினர்கள் உள்ளனர். 5025 வேட்பாளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவர் தொடர்பிலும் சிந்தித்து கட்சியை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான நடவக்கைகள் எம்மால் முன்னெடுக்கப்படும் என்றார்.