நீண்ட அனுபவமும் நிருவாக ஆளுமையும் மிக்க பெருமகனார் சிவஞானசோதியை தமிழ் சமூகம் இழந்து நிற்கின்றது. இது ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் பெரும் இழப்பாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். 

வே.சிவஞானசோதியின் மறைவை இட்டு அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

யாழ்.இந்துக்கல்லூரியின் பழைய மாணவரான சிவஞான சோதி இலங்கை நிர்வாக சேவையில் நீண்டகால அனுபவமிக்கவர். அவர் இந்து கலாசார அமைச்சு, பாரம்பரிய சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு, மீள்குடியேற்ற அமைச்சு, வடக்குச் செயலணி, நல்லிணக்க அமைச்சு ஆகியவற்றில் செயலாளராக பணியாற்றிய காலத்தில் கணிசமான சேவைகளை தன் இனத்திற்குச் செய்திருக்கின்றார். 

மிக முக்கியமாக, கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் மிக நெருக்கமாக முறையில் இணைந்து வடக்கு, கிழக்கில் அபிவிருத்திச் செயற்பாடுகள், வேலைவாய்ப்புக்கள், உள்ளிட்ட கணிசமான பலபணிகளை காத்திரமாக முன்னெடுத்துள்ளார். 

அதேநேரம், எதிர்காலத்திலும் அவரது சேவை தமிழ் மக்களுக்கு மிகவும் இன்றியமையாததொன்றாகவே இருந்தது. இதனை பலரும் உணர்ந்திருந்தார்கள். அவரை மக்கள் சேவைக்கு அழைத்துவருவதற்கான சமிக்ஞைகள் பலவற்றையும் எமது கட்சியின் உறுப்பினர்களும், புத்திஜீவிகளும் வலியுறுத்தியிருந்தனர். 

சுயாதீன மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளராக பணியாற்றிக் கொண்டிருந்த தருணத்தல் அவர் நோய்வாய்ப்பட்டு இயற்கை எய்திவிட்டார். அவரது பிரிவு தமிழ் இனத்திற்கு பெரும் இழப்பாகும். 

நிருவாக ஆளுமை மிக்க பெருமகனாரை தமிழ் சமூகம் இழந்துவிட்டது. அவரது இழப்பு நிரப்ப முடியாத வெற்றிடமாகும். அவரைப் பிரிந்து நிற்கும் அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.