(இராஜதுரை ஹஷான்)

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகளை சட்டமாதிபர் திணைக்களம் முன்னெடுக்கும்  குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களை பாதுகாக்க வேண்டிய தேவையும், சட்ட நடவடிக்கைகளில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டிய தேவையும் அரசாங்கத்துக்கு கிடையாது. 

பெட்டிகலோ கெம்பஸ் தொடர்பில் இறுதி தீர்மானம் இதுவரையில் எடுக்கப்படவில்லை . பாராளுமன்ற மட்டத்தில் முன்னெடுக்க வேண்டிய நடடிக்கைகளை அரசாங்கம் துரிதகரமாக செயற்படுத்தும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையினை பரிசீலனை செய்த அமைச்சரவை உபகுழுவின்  அறிக்கை தொடர்பில் தெளிவுப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம் பெற்றது. இதன் போது கருத்துரைக்கையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நல்லாட்சி அரசாங்கத்தின் பலவீனத்தன்மையினால் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் இடம் பெற்றது என்பது  இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் ஊடாக தெரிய வந்துள்ளது.  

குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்  2019 ஆம் ஆண்டு செப்டம்பெர் மாதம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது.

 ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை  ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டிய  நடவடிக்கை குறித்து ஆராய அமைச்சரவை உறுப்பிணர்கள் அடங்கிய உபகுழு நியமிக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கை குறித்து சட்டமாதிபருக்கு பரிந்துரைகள் அறிக்கை ஊடாக முன்வைக்கப்பட்டுள்ளன.

 அறிக்கையில் குற்றவாளிகள் என குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக ஏன் இதுவரையில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என கேள்வி எழுப்பப்படுகிறது. 

சட்டமாதிபரின் செயற்பாடுகளில் அரசியல் அழுத்தம் பிரயோகிக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு  கிடையாது. சட்ட நடவடிக்கைகள் சுயாதீன முறையில் இடம் பெறுகின்றன.

உபகுழுவின் அறிக்கையில் பாராளுமன்ற மட்டத்தில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள். குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் துரிதமாக செயற்படும் தேசிய பாதுகாப்பினை பலப்படுத்தும் நோக்கிலும், ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் போன்ற சம்பவம் எதிர்காலத்தில் இடம் பெறாத அளவிற்கு  புதிய சட்டங்கள் இயற்ப்படும்.

பெட்டிகலோ கெம்பஸ் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை. இந்த கெம்பஸை அரசுடமையாக்குவதா அல்லது தனியார் மயப்படுத்துவதா என்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

அறிக்கையில் குற்றவாளிகள்  அல்லது குண்டுத்தாக்குதல் சம்பவத்திற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள்என சுட்டிக்காட்டியுள்ளவர்களை பாதுகாக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தை அரசாங்கம் தேர்தல் வாக்குறுதியாக மாத்திரம் குறிப்பிடவில்லை. ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் நாட்டின் பிரதான தேசிய பிரச்சினையாக காணப்படுகிறது.

இதற்கு தீர்வு காணப்பட வேண்டும்.குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கபபட வேண்டும். இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் சிறந்த முறையில் முன்னெடுத்துள்ளது. என்றார்.