(இராஜதுரை ஹஷான்)

நல்லாட்சி அரசாங்கத்தில் பொலிஸ் திணைக்களம் சிறந்த முறையில் பொறுப்புடன் செயற்பட்டிருந்தால் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம் பெற்றிருக்காது. 

அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தியுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க  அமைச்சரவை உபகுழு பணிப்புரை விடுத்துள்ளது. 

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தில் 18 வயதுக்கும் குறைவான  பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளுக்கு உதவி செய்ய யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என  நீர்பாசனம் ,அனர்த்த முகாமைத்துவம் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்  சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையினை பரிசீலனை செய்த அமைச்சரவை உபகுழுவின்  அறிக்கை தொடர்பில் தெளிவுப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம் பெற்றது. 

இதன் போது கருத்துரைக்கையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்க வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில்  ஆராய  அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டது.

ஏப்ரல் 21 குண்டுதாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை மீள் பரிசீலனை செய்த அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் நேற்று முன்தினம்  கையளிக்கப்பட்டது. 

உயிர்த்த ஞாயிறுதின குண்டு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் அறிக்கை என்பவற்றை பரிசீலனை செய்து அது தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த அமைச்சரவை உப குழுவின் இறுதி யோசனைகள்  இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறுதின குண்டுதாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை விரிவாக ஆராய்ந்த குழு 78 பரிந்துரைகளை அடையாளம் கண்டுள்ளது. அந்த பரிந்துரைகளை எவ்வாறு நடைமுறைபடுத்துவது , எந்த நிறுவனம் ஊடாக நடைமுறைபடுத்துவது என்பது தொடர்பான விடயங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. சட்டரீதியிலான பரிந்துரைகளை ஜனாதிபதி இதற்கு முன்னர் சட்டமா அதிபருக்கு அனுப்பிவைத்துள்ளார்.

இலங்கையில் இஸ்லாமிய தேசத்தை உருவாக்கும் நோக்கில் ஒரு தரப்பினர் சிரியாவில் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளார்கள் என  2016 ஆம் ஆண்டு அப்போதைய நீதியமைச்சராக  கடமையாற்றிய  விஜயதாஸ ராஜபக்ஷ பாராளுமன்றில் சிறப்பு உரையாற்றினார். 

இவரது உரைக்கு பாராளுமன்றிலும், ஊடக சந்திப்பிலும் ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.   இவரது கருத்து தொடர்பிலும், இவர் குறிப்பிட்ட கருத்துக்கு எதிராகவும் குறிப்பிடப்பட்ட கருத்து தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கை என்ன ?

2018 ஆண்டு ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி மாவனெல்லை  புத்தர் சிலை உடைப்பு விவகாரம் இடம்பெற்றது. இச்சம்பவம் தொடர்பில் கேகாலை பொலிஸ் அதிகாரி  கமல் பெரேரா முழுமையான  விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். 

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள்  விடுதலை செய்ப்பட்டுள்ளார்கள். புத்தர் சிலை உடைப்பு விவகாரம் விசாரணை எவ்வாறு தடைப்பட்டது என்பவை மீள ஆராயப்பட வேண்டும்.

2019 ஆம் ஆண்டு புத்தளம் வனாத்தவில்லு பகுதியில்  பெருந்தொகையான வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு. நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களில் இருவர் ஜனாதிபதியின்  உத்தரவின் பெயரில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் . ஜனாதிபதி  இவர்களை விடுதலை செய்தாரா  அல்லது  விடுதலைக்கான முயற்சிகளில் ஏதேனும் முறைக்கேடுகள் இடம் பெற்றுள்ளனதா ?

 பயங்கரவாதி சஹ்ரானை கைது செய்யுமாறு 2015 ஆம் ஆண்டு தொடக்கம் ஜனாதிபதி செயலகம், சட்டமாதிபர் திணைக்களம் என உயர்மட்டத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன. 

காத்தான்குடி பிரதேசத்தில் மத முரண்பாடுகள் தலைத்தூக்கியுள்ளன . ஆகவே பயங்கரவாதி சஹ்ரானை கைது செய்யுமாறு சாதாரண முஸ்லிம் மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்கள். இவ்விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினரும், குறிப்பாக காத்தான்குடி பொலிஸாரும் எவ்வித நடவடிக்கைளையும் முன்னெடுக்கவில்லை.

நாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாதம் தலைத்தூக்கியுள்ளது என்பதை பொலிஸார் நன்கு அறிந்துள்ளனர். ஆனால் எவ்வித நடவடிக்கைகளையும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம் பெறும் வரை முன்னெக்கவில்லை. 

பொறுப்பில் இருந்து பொலிஸ் அதிகாரிகள் அதிகாரத்தை முறைக்கேடாக பயன்படுத்தியுள்ளமை அறிக்கைகள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது அவசியாகும்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் 18 வயதுக்கும் குறைவான வயதினையுடைய பிள்ளைகள் இருப்பார்களாயின் அவர்களின கற்றல் நடவடிக்கைகளுக்கு உதவி செய்ய யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 

அறிக்கையின் உள்ளடக்கத்தை விரைவாக செயற்படுத்தவது தொடர்பில்  விடயதானங்களுக்கு பொறுப்பான அமைச்சுக்களுக்கு  ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றார்.