(எம்.மனோசித்ரா)

அமைச்சரொருவர் முன்வைக்கும் எந்தவொரு யோசனையும் உடனடியாக சட்டமாக்கப்பட மாட்டாது. அமைச்சரவையில் முன்வைக்கப்படுகின்ற யோசனைகளில் காலத்திற்கு உகந்தவை தொடர்பில் மாத்திரமே துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றை ஊடகவியலாளர் சந்திப்பின் போது கேட்டப்பட்ட கேள்விக்குக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

கேள்வி : புர்கா தடை மற்றும் இளைஞர்களுக்கான இராணுவ பயிற்சி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அமைச்சர் சரத் வீரசேகரவால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் , நாட்டில் தற்போது காணப்படுகின்ற பிரச்சினைகளை மறைத்து மக்களை ஏமாற்றுவதற்காகவா? அந்த யோசனைகள் ஏன் இன்னும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை?

பதில் : அவ்வாறு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. எந்தவொரு அமைச்சருக்கும் தனது அமைச்சுடன் தொடர்புடைய தீர்மானங்களை அதிகாரிகளுடன் இணைந்து முன்னெடுக்க முடியும். இவ்வாறு எடுக்கப்படும் தீர்மானங்கள் அமைச்சரவை சமர்ப்பிக்கப்பட்டால் அது தொடர்பில் துரிதமாக நடவடிக்கை எடுப்பதா அல்லது காலம் தாழ்த்தி நடவடிக்கை எடுப்பதா என்று அமைச்சரவையே தீர்மானிக்கும்.

எனவே அமைச்சரொருவர் முன்வைக்கும் எந்தவொரு யோசனையும் உடனடியாக சட்டமாக்கப்பட மாட்டாது. குறித்த யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு , அமைச்சரவை அதற்கு அனுமதி வழங்கினால் சட்ட மூலம் தயாரிக்கப்படும். அதன் பின்னர் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த படிமுறைகளுக்கு இடைப்பட்ட காலத்தில் குறித்த விடயத்தில் மாற்றங்களும் ஏற்படக் கூடும். இவ்வாறான விடயங்கள் பரந்துபட்டளவில் தீர்மானிக்கப்பட வேண்டியவையாகும் . அத்தோடு காலத்திற்கு ஏற்ற யோசனைகள் தொடர்பில் மாத்திரமே துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவிதார்.