(எம்.மனோசித்ரா)

இறக்குமதி செய்யப்பட்டுள்ள புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய மூலக்கூறுகள் அடங்கிய தேங்காய் எண்ணெய்யை மீள் ஏற்றுமதி செய்யாமல் சுங்க திணைக்களம் எதற்காக களஞ்சியப்படுத்தி வைத்துள்ளது ? யாருடைய உத்தரவிற்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் றோஹினி கவிரத்ன கேள்வியெழுப்பினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

இறக்குமதி செய்யப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய எண்ணெய் ஏன் இன்னும் மீள் ஏற்றுமதி செய்யப்படாமல் சுங்க திணைக்களத்தினரால் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது என்பதே தற்போதுள்ள பிரச்சினையாகும். யாருடைய உத்தரவிற்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது ?

எனினும் இலங்கை தர நிர்ணய கட்டளை நிறுவனம் பொறுப்பற்ற வகையில் கருத்துக்களை தெரிவித்துள்ளது. 

அவ்வாறு பொறுப்பிலிருந்து விலக இடமளிக்க முடியாது. அத்தோடு இந்த சர்ச்சைக்குரிய எண்ணெய் சந்தைகளுக்கு விநியோகிப்பட்டுள்ளனவா இல்லையா என்பதும் தெளிவாகக் கூறப்படவில்லை. அவ்வாறு விநியோகிக்கப்பட்டிருந்தால் எந்த பெயரைக் கொண்டுள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும்.

இது இவ்வாறிருக்க இதே போன்று விஷத்தன்மையுடைய உணவு பொருட்களும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் , எனினும் குறித்த நிறுவனங்கள் வீழ்ச்சியடையும் என்பதால் அதனை வெளிப்படுத்த முடியாது என்று இலங்கை தர நிர்ணய கட்டளை நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

தர நிர்ணய கட்டளை நிறுவனம் மக்களை பாதுகாப்பதற்காகவா அல்லது இறக்குமதி நிறுவனங்களைப் பாதுகாப்பதற்காகவா உள்ளது ? இவ்வாறான விடயங்களில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.