திருமதி இலங்கை அழகி போட்டியாளர் புஷ்பிகா டி சில்வாவுக்கான வெற்றியாளராக மீண்டும் முடிசூட்டப்படவுள்ளார்.

2021 ஆம் ஆண்டின் திருமதி இலங்கை அழகியாக அறிவிக்கப்பட்ட போட்டியாளரிடமிருந்து கிரீடத்தை பறித்த சம்பவம் ஒன்று நேற்று இரவு இடம்பெற்றது.

முன்னாள் திருமதி இலங்கை கரோலின் ஜூரி வெற்றி பெற்ற போட்டியாளர் புஷ்பிகா டி சில்வா அதற்கு தகுதியற்றவரென அறிவித்தார்.

போட்டியாளர் திருமணமானவராக இருக்க வேண்டும் என்பதோடு விவாகரத்து பெற்றவராக இருக்க முடியாது என்பதே  அதற்கான காரணமாகும்.

அதன் பின் கரொலின் ஜூரி திருமதி புஷ்பிகா டி சில்வாவிடமிருந்து கிரீடத்தை எடுத்து போட்டியின் இரண்டாவது வெற்றியாளருக்கு அணிவித்தார். இதனால் நேற்றிரவு பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.

இது குறித்து திருமதி இலங்கை அழகி போட்டியின் தேசிய இயக்குநர் தெரிவித்துள்ளதாவது,

திருமதி இலங்கை அழகி போட்டியின் அமைப்பாளர்களால் புஷ்பிகா டி சில்வாவுக்கு கிரீடம் திருப்பித் தரப்படும் என்றார்.

முன்னாள் திருமதி இலங்கை கரோலின் ஜூரி கிரீடம் சூட்டும் வரை இந்த விஷயத்தில் ஒரு பிரச்சினையையும் எழுப்பவில்லை, புஷ்பிகா டி சில்வாவுக்கு எதிரான கூற்றுக்களை நிரூபிக்க எந்த ஆவணமும் வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், திருமதி இலங்கை அழகி புஷ்பிகா டி சில்வா இந்த சம்பவம் தொடர்பாக சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

புஷ்பிகா டி சில்வா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,  தான் விவாகரத்து செய்யவில்லை என்றும் தனிப்பட்ட காரணங்களால் தனது மகனுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் , இந்த நிகழ்வில் போட்டியிடுவதற்கு முன்னர் அவரது நிலை குறித்து அமைப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது, எனவே அவர் பொருத்தமற்றவராக இருந்தால் அவர் முன்பே தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பார்  என தெரிவித்துள்ளார்.

திருமதி உலக அழகி கரோலின் ஜூரி கிரீடத்தை பறித்த போது திருமதி இலங்கை அழகி  ஷ்பிகா டி சில்வா காயமடைந்த நிலையில், இன்று காலை தான் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது தலையில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தின் போது தனக்கு அளிக்கப்பட்ட ஆதரவு வழங்கிய தனது நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.