பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி “இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினரால்” வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா கண்டி வீதியில் பிற்பகல் 12 மணியளவில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வங்கி ஊழியர்களிற்கான ஓய்வுதியத்திட்டம் தொடர்பான பிரச்சனை, வங்கி ஊழியர்களின் பயிற்சிகாலத்தினை  இரண்டு வருடங்களாக மட்டுப்படுத்துதல், மற்றும் இலங்கை மர்ச்சன்ட் வங்கியின் நிர்வாகம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்குமாறு கோரி குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்,

குறித்த விடயங்களை தீர்ப்பதற்கு மிகவும் தெளிவான முறையில் பிரதமரால் தீர்வுகள் முன்வைக்கப்பட்ட நிலையிலும் அது செயற்ப்படுத்தப்படவில்லை,  

இவற்றை வலியுறுத்தி நாம் அந்தந்த வங்கிகளின் நிர்வாகத்தரப்புகளுடன் பலசுற்று கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தாலும், பிரதமரால் வழங்கப்பட்ட தீர்வுகளை செயற்படுத்துவதற்கு பதிலாக பல்வேறு விதமான விளக்கங்கள் வழங்கப்பட்டு காலங்கடத்தப்பட்டு வருகின்றமையால், ஊழியர்களிற்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது. எனவே குறித்த பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் என்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பிரதமர் உறுதியளித்து எட்டு மாதங்கள் ஆகியும் ஓய்வூதியம் எங்கே, இணக்கம் தெரிவிக்கப்பட்ட 96 இன் பின்னரான ஓய்வூதிய திருத்தங்களை உடனே செயற்படுத்துக, பயிற்சிக்காலத்தை இரண்டு வருடங்களிற்கு மட்டுப்படுத்துக, போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.