ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைப் பொறுப்பை தனக்கு அடுத்து பெண்ணொருவர் ஏற்பதைத் தான் விரும்புவதாக அந்த சபையின் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் தெரி­வித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 70 வருடத்திற்கு மேற்பட்ட வரலாற் றில் 8 ஆண் தலைவர்கள் பதவிப் பொறுப்பை வகித்துள்ள நிலையில் தற்போது அந்தப் பதவிப் பொறுப்பை பெண்ணொருவர் ஏற்பது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுவதாக அவர் கூறினார்.

தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைத்துவ பதவிக்கு போட்டியிடும் 11 வேட்பாளர்களில் 5 பேர் பெண்களாவர்.

செயலாளர் நாயகத்துக்கான பதவி நிலைக்கான நியமனம் அந்த சபையில் வகிபாகத்தைக் கொண்ட 15 நாடுகளால் சிபாரிசு செய்யப்பட்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையிலுள்ள 193 நாடுகளால் தெரிவு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

புதிய தலைவருக்கான தெரிவு பாரம்பரிய முறைப்படி உலகமெங்குமுள்ள நாடுகளிடையே சுழற்சிமுறையில் மேற்கொள்ளப்படும்.

மேற்படி பதவி நிலைக்கு கிழக்கு ஐரோப்பா மற்றும் ரஷ்யா என்பன ஒருபோதும் பிரதிநிதிகளை கொண்டிருக்காதுள்ளன.

இந்த ஆண்டுக்கான செயலாளர் நாயகப் பதவி நிலைக்கான வேட்பாளர்கள் இலத்தீன் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, கிழக்கு ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்களாவர்.

யார் அந்த பதவியை ஏற்பினும் எதிர்காலம் தொடர்பில் தெளிவான கண்ணோட்டம், சமாதானம், அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அர்ப்பணிப்பு என்பவற்றைக் கொண்டிருக்க வேண்டும் என பான் கீ மூன் வலியுறுத்தினார்.

பெண்கள், சிறுமிகள், விசேட தேவையுள்ளவர்கள், சிறுபான்மை சமூகத்தவர்கள் தொடர்பில் ஐக் கிய நாடுகள் சபை அக்கறை காட்டாவிட்டால் வேறு யார் அக் கறை காட்டுவார்கள்? என அவர் கேள்வி எழுப்பினார்.