(இராஜதுரை ஹஷான்)

சிங்கராஜ வனப்பகுதி அழிக்கப்படுவதாக கூறி எதிர்தரப்பினர் அரசியல் இலாபம் தேடிக் கொள்கிறார்கள். கிராம புற மக்களுக்கான அபிவிருத்தி பணிகளை சுற்றுசூழலுக்கு எதிரான செயற்பாடு என கருத முடியாது என வனபாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு  கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர்  மேலும் குறிப்பிடுகையில்,

சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகள் அரச அதிகாரத்துடன் முன்னெடுக்கப்படுவதாக கூறிக் கொண்டு எதிர்தரப்பினர் அரசியல் இலாபம் தேடிக் கொள்கிறார்கள். சிங்கராஜ வனப்பகுதியின் நிலப்பரப்பு ஆக்கிரமிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டது. இவ்விடயம் குறித்து முறையான விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

சுற்றுசூழல் பாதுகாப்பு விவகாரம் தற்போது அரசியல்மயப்படுத்தப்பட்டு விட்டன. சிங்கராஜ வனப்பகுதி குறித்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் சூழ்ச்சிகள் உள்ளக மற்றும் சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றன. உள்ளக மட்டத்தில் சுற்றுசூழல் விவகாரம் பிரதான குற்றச்சாட்டாக காணப்படுகிறது.

வனப்பகுதியை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு காணப்படுகிறது. கிராமிய புறங்களின் உட்கட்டமைப்பு வசதிகளுக்கான அபிவிருத்தி நிர்மாண பணிகளை முன்னெடுக்கும் போது அதனை  சுற்றுசூழலுக்கு எதிரான செயற்பாடு என குறிப்பிட முடியாது.

நல்லாட்சி அரசாங்கத்தில் வில்பத்து காடு அரச அதிகாரத்துடன் அழிக்கப்பட்டன. இவ்விடயம் குறித்து தற்போது சூழலியளாலர்கள் என குறிப்பிட்டுக் கொள்பவர்கள் எவரும் அன்று எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சுற்றுசூழக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் எவ்வித அபிவிருத்தி பணிகளையும் முன்னெடுக்கவில்லை. வனப்பகுதியின் பரப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளும் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. என்றார்.