இலங்கையில் உள்ள சீனப் பிரஜைகளுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் திட்டமானது இன்றைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந் நடவடிக்கைக்காக சீனாவிலிருந்து 6 இலட்சம் சினோபார்ம் கொவிட்-19 தடுப்பூசிகள் கடந்த வாரம் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை இலங்கை மக்களுக்கான இந்த தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை விசேட நிபுணர் குழுவொன்றினால் ஆராயப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளப்படும் என்று ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

எனினும் உலக சுகாதார ஸ்தாபனம் , தேசிய மருந்துகள் கட்டுபாட்டு அதிகாரசபை மற்றும் தடுப்பூசி தொடர்பான விசேட நிபுணர்கள் குழு என்பன அனுமதி வழங்காத சினோபார்ம் தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்த வேண்டாம் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

சீனாவின் பீஜிங் தலைநகரில் உள்ள தேசிய பயோடெக் ஔடத நிறுவனம் “சினோபாம்” கொவிட் தடுப்பூசிகளை உற்பத்தி செய்துள்ளது. 

6 இலட்சம் தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டு ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யுஎல் 869 விமானம் கடந்த மார்ச் 31 பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.