(ஆர்.ராம்)

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வமான மக்கள் சீனக் குடியரசு நோக்கிய பயண நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்படவில்லை என்று இலங்கைக்கான மக்கள் சீனக் குடியரசின் தூதரகம் தெரிவித்துள்ளது.

சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதி ஷி  ஜின் பிங்கிற்கும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் அண்மையில் தொலைபேசி வாயிலான சம்பாசனையொன்று நடைபெற்றிருந்தது. 

இதனையடுத்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சீனாவுக்கு உத்தியோக பூர்வமான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ஷி ன் பிங் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் இலங்கைக்கான மக்கள் சீனக் குடியரசின் தூதரகப் பேச்சாளரும் அரசியல் பிரிவுத் தலைவருமான லூ சொங் இவ்விடயம் பற்றி தெரிவிக்கையில், இருநாடுகளின் ஜனாதிபதிகளுக்கும் இடையில் சம்பாசனை இடம்பெற்றது. 

இதனையடுத்து ஜனாதிபதி ஷி  ஜின் பிங்கினால் இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு சீனாவுக்கு விஜயம் செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் தற்போது வரையில் அதற்கான எந்தவிதமான நிகழ்ச்சி நிரலும் தயாரிக்கப்படவில்லை. கொரோனா நிலைமைகள் சுமூகமடைந்ததை அடுத்தே அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்றார்.

இதேவேளை, ஜனாதிபதி பதவியை கோத்தாபய ராஜபக்ஷ  ஏற்றுக்கொண்டதன் பின்னர் இந்தியாவைத் தவிர இதுவரையில் வேறெந்த நாட்டிற்கும் விஜயம் செய்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.