(எம்.மனோசித்ரா)

தமிழ் - சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பொது மக்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் , ஏற்பாடு செய்யக் கூடிய விளையாட்டு போட்டிகள் மற்றும் அதன் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் , விற்பனையின் போதும் கொள்வனவின் போதும் விற்பனையாளர்களும் நுகர்வோரும் பின்பற்ற வேண்டிய விடயங்கள் மற்றும் அலுவலகங்கள் அல்லது நிறுவனங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கும் போது பின்பற்ற வேண்டிய விடயங்கள் அடங்கிய விசேட சுற்று நிரூபம் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய சில பாரம்பரிய விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி வழங்ப்பட்டுள்ளதோடு , இதன் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் அலுவலகங்கள் , நிறுவனங்களில் கொண்டாட்டங்களின் போது 100 இற்கும் குறைவான நபர்களே பங்குபற்ற வேண்டும் என்றும் சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவினால் நேற்று சனிக்கிழமை வெளியிடப்பட்ட இவ்விசேட சுற்று நிரூபத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பான விபரங்கள் வருமாறு :  

கொண்டாட்டங்களை குடும்பத்தாருடன் மட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்

புத்தாண்டு பிறப்பின் போது வழமையாக பொது வெளிகளில் இடம்பெறுகின்ற கொண்டாட்டங்களை இம்முறை குடும்பத்தாறுடன் மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். 

அத்தோடு கோவில்கள் மற்றும் விகாரைகளுக்குச் செல்வோர் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை நிச்சயம் பின்பற்ற வேண்டும். 

இயன்றளவு உறவினர்களின் வீடுகளுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்வதோடு , வீடுகளுக்கு அப்பால் பெருமளவானோர் ஒன்று கூடி விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

வேலைத்தளங்களில் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள்

அலுவலகங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்யும் போது சுகாதார பாதுகாப்பு விதிமுறைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். 

அதற்கமைய 100 ஐ விட குறைந்தளவானோருடன் கொண்டாட்டங்களில் ஈடுபடல் , கொவிட் பரவலைத் தவிர்ப்பதற்காக இதற்கு முன்னர் பின்பற்றிய அடிப்படை விடயங்களை (சமூக இடைவெளியை பேணுதல், முகக் கவசம் அணிதல், கைகளை கழுவுதல்) கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

அத்தோடு கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்கள் , தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் , தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் உள்ளிட்டோரை கொண்டாட்டங்களில் அனுமதிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். 

அத்தோடு கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரதேசத்திலுள்ளவர்களை மாத்திரம் அதில் இணைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு வழங்கப்பட்டுள்ள சகல விதிமுறைகளுக்கும் அமைய கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்படும் என்று வாக்குறுதியளிப்பதோடு, முழுமைப்படுத்தப்பட்டப்பட்ட வாக்குறுதி அறிவிப்பின் ஆவணத்தை பிரதேச பொது சுகாதார பரிசோதகர்களிடம் கையளிக்க வேண்டும். 

அத்தோடு அதன் பிரதிகளை மாநகரசபை, நகரசபை, பிரதேசசபை என்பவற்றுக்கு அனுப்பி வைப்பதோடு , நிறுவன பிரதானிகளும் ஒரு பிரதியை தம்வசம் வைத்துக் கொள்ள வேண்டும்.

விளையாட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள்

மேற்கூறப்பட்டதைப் போன்று கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்கள் , தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் , தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் உள்ளிட்டோரை விளையாட்டு போட்டிகளில் அனுமதிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

விளையாட்டு போட்களிலுள்ள பார்வையாளர்கள் தத்தமது குடும்ப அங்கத்தவர்களுடன் மாத்திரம் இணைந்திருக்க வேண்டும். 

ஏனையோருடன் சமூக இடைவெளியை பேண வேண்டும். அத்தோடு சமூக இடைவெளியை பேணுதல், முகக் கவசம் அணிதல், கைகளை கழுவுதல் என்பவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

புத்தாண்டின் போதான பாரம்பரிய விளையாட்டு போட்டிகளை நடத்த முடியும் என்ற போதிலும் , அதனை ஏற்பாடு செய்யும் போது பங்குபற்றும் போது அல்லது பார்வையிடும் போது கொவிட் பரவல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படாதவாறு அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

நடத்தக்கூடிய விளையாட்டு போட்டிகள்

கயிறு இழுத்தல் , அழகு ராணிஃராஜா போட்டி, சைக்கிள் ஓட்ட போட்டி, மரதன் ஓட்டப் போட்டி, சட்டி உடைத்தல் , தலையணை சண்டை, பனிஸ் உண்ணல் , ரபான் வாசித்தல் , யானைக்கு கண் வைத்தல் உள்ளிட்ட போட்டிகளை நடத்த முடியும் என்பதோடு அவற்றின் போது சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்

விற்பனை/கொள்வனவுகளின் போது அவதானம் செலுத்த வேண்டியவை

புத்தாண்டின் போது அத்தியாவசிய பொருட் கொள்வனவு மற்றும் ஆடை கொள்வனவு என்பவற்றின் போது பொது மக்கள் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை நிச்சயம் பின்பற்ற வேண்டும் என்பதோடு , விற்பனை நிலைய உரிமையாளர்களால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இயன்றளவு பரந்தளவான இடங்களில் விற்பனை நடவடிக்கைகளை முன்னெடுப்பது பொறுத்தமானதாக இருக்கும்.