தமிழக தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த தி.மு.க மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி அவர்களுக்கு கொரோனாத் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருநெல்வேலியில் உள்ள பாளையங்கோட்டை, ஆலங்குளம், சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கனிமொழி சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு அறிகுறிகள் இருந்ததால் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் இன்று வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மருத்துவரின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இதனிடையே இன்று நெல்லை மற்றும் கன்னியாகுமரியில் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்த காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் சுற்றுப்பயணம் இரத்து செய்யப்பட்டிருக்கிறது.

பிரியங்கா காந்தியின் கணவரான றொபட் வதேராவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் சுற்றுப்பயணம் இரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.