வட்டுவாகலில் அருட்தந்தை பிரான்சிஸ் முன்னிலையில் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பொறுப்பாளர்களுள் ஒருவரான சுமன், கடற்புலித் தளபதிகளுள் ஒருவரான நரேன் மற்றும் காவல்துறை முக்கியஸ்தரான மாதவன் ஆகியோர் எங்கே என காணாமல்போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழு முன்னிலையில் அவர்களின் உறவினர்கள் கேள்வி எழுப்பினர்.
காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் நான்காம் நாள் அமர்வு நேற்று திங்கட்கிழமை பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இதில் சாட்சியமளிக்கும்போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
அவர் அளித்த சாட்சியங்களின் விபரம் வருமாறு,
விடுதலைப் புலிகளின் கடற்படைத் தளபதிகளில் ஒருவரான நரேன் என அழைக்கப்படும் சிவஞானசுந்தரம் ஜனார்த்தனனின் பெற்றோர் சாட்சியமளிக்கையில்
எனது மகன் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து நீண்டகாலமாக செயற்பட்டு வந்தார். கடற்புலிப் பிரிவில் தளபதிகளில் ஒருவராக இருந்தவர் நரேன் என அழைக்கப்பட்டார்.
யுத்தம் உக்கிரமடைந்து இறுதி நாட்களை எட்டியிருந்த நிலையில் வட்டுவாகல் பாலத்தினூடாக பலர் இராணுவ கட்டுப்பாடு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார். எனது மகனுடன் நாங்களும் வட்டுவாகல் பாலத்தினை அடைந்திருந்தபோது இராணுவம் பலரை தடுத்து வைத்திருந்தது. அதன் பின்னர் சிறிய ஒலி பெருக்கியூடாக விடுதலைப் புலிகளில் இருந்தவர்கள் எம்மிடம் வந்து சரணடையுங்கள் உங்களுக்கு பொது மன்னிப்பளித்து விடுதலை செய்கின்றோமென அறிவித்தனர்.
இதனையடுத்து நானும் எனது மனைவியும் எங்கள் கைகளால் எனது மகனை இராணுவத்தினரிடம் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் முன்னிலையில் ஒப்படைத்தோம். அதன் பின்னர் அவர்களை பேருந்து வண்டிகளில் ஏற்றிக் கொண்டு சென்று விட்டனர். நானும் மனைவியும் வவுனியாவிலுள்ள இடைத்தங்கல் முகாமில் சிறிது காலம் தங்கிவிட்டு பின்னர் சொந்த ஊரை அடைந்துள்ளோம்.
எனது மகனை இராணுவத்தினரிடம் கையளித்ததற்கு நாமே சாட்சியாளர்களாக உள்ளோம். எனது மகன் உள்ளிட்ட பலர் அவ்வாறு அருட்தந்தை முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாதுள்ளது. தயவு செய்து அவர்களுக்கு என்ன நடந்தது? எங்குள்ளார்கள்? என்பதை நீங்கள் பகிரங்கப்படுத்தவேண்டுமென மன்றாட்டமாக கேட்டுக் கொண்டனர்.
இதேவேளை விடுதலைப் புலிகள் அமைப்பின் காவற்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனின் நேரடி கண்காணிப்பில் செயற்பட்டிருந்த மாதவன் என்று அழைக்கப்படும் சிவசிதம்பரத்தின் மனைவியான வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சிவசிதம்பரம் இன்பரூபி சாட்சியமளிக்கையில்,
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின்போது வட்டுவாகல் பாலத்தினூடாக நாம் நடந்துவந்து கொண்டிருந்தோம். அதன்போது இராணுவம் எங்களை தடுத்துவைத்தது. எங்களுடன் பலர் அமர்ந்திருந்தார்கள். அதன்பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்தவர்களை சரணடையுமாறும் பொது மன்னிப்பளிப்பதாகவும் பகிரங்க அறிவித்தல் விடுத்தனர்.
இதனையடுத்து எனது கணவனை எனது கைகளாலேயே இராணுவத்தினரிடத்தில் ஒப்படைத்தேன். அவரை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்வேறு பேருந்துகளில் ஒன்றில் ஏற்றிச் சென்றார்கள். ஆனால் பேருந்தின் அடையாளத்தை என்னால் முடியவில்லை. அதன்பின்னர் நாம் இடைத்தங்கல் முகாமிற்குச் சென்று சொந்த இடத்திற்கு வருகை தந்திருந்தோம். எனினும் எனது கணவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. அவருடன் சென்றிருந்த ஒருசிலரை நினைவு வைத்து அவர்களிடத்திலும் விசாரித்தோம். இருப்பினும் கணவர் தொடர்பான எந்த விபரங்களும் கிடைக்கவில்லையென அழுதவாறே குறிப்பிட்டார்.
விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்களில் ஒருவரான சுமன் என்று அழைக்கப்படும் வைரமுத்து ரதீஸ்வரனின் மனைவி ரதீஸ்வரன் சபிதா சாட்சியமளிக்கையில்,
யுத்தம் இறுதிக் கட்டத்தை அடைந்போது நானும் எனது கணவரும் பிள்ளைகளும் 16 ஆம் திகதி இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்தோம். அன்றையதினம் இரானுவத்தினர் பதிவுகளை மேற்கொண்டதன் பின்னர் வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றனர். இதன் பின்னர் அடுத்தநாள் விசாரணைக்காக என்னுடைய கணவரை தனியாக அழைத்துச் சென்றனர். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் அன்றைய தினம் விடுவிக்கப்படவில்லை. அந்த இடத்தில் நானும் எனது பிள்ளைகளும் என்னைப் போன்று விசாரணைக்கு அனுப்பிவிட்டிருந்த உறவுகள் பலரும் காத்துக் கொண்டிருந்தோம்.
இராணுவத்தினர் யாரையும் விடுவிக்காத நிலையில் மறுநாள் எமது உறவினர்கள் எங்கேயென இராணுவத்தினரிடம் விசாரித்தோம்.
விசாரணை நிறைவடைந்ததும் அவர்களை அனுப்பிவைப்போம். நீங்கள் முகாமிற்குச் செல்லுங்கள் உங்களுடன் அவர்கள் இணைக்கப்படுவார்கள் எனக் கூறினர். அதற்கடுத்த தினத்தன்று நாங்கள் முகாமிற்குச் சென்றோம். நாங்கள் முகாமிற்குச் செல்லும் போது என்னுடைய கணவர் உள்ளிட்ட பலரை இராணுவத்தினர் மூன்று பஸ்களில் ஏற்றி கொண்டு செல்வதை நாங்கள் நேரடியாகவே பார்த்தோம்.
அது மட்டுமல்லாமல் எனது கணவரை அத்தருணத்தில் சந்தித்துக் கதைப்பதற்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதன்போது நீங்கள் ஒமந்தை முகாமிற்குச் செல்லுங்கள் நாங்களும் அதே ஓமந்தை முகாமிற்குத் தான் வருகின்றோம் என்று என்னிடத்தில் கணவர் கூறினார்.
ஆனால் நாங்கள் அங்கு சென்ற பின்னர் பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்ட என்னுடைய கணவர் உள்ளிட்ட புலிகளின் தளபதிகள் பொறுப்பாளர்கள் யாருமே அங்கு வரவில்லை. எங்கள் கைகளால் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு நாங்கள் பார்த்திருக்க மூன்று பஸ்களில் கொண்டு செல்லப்பட்ட என்னுடைய கணவர் எங்கே. விசாரணை செய்கிறோம் என்று அழைத்துச் செல்லப்பட்டு முகாமிற்கு கொண்டு வருகின்றோம் என்று கூறி பஸ்ஸில் ஏற்றியவர்களுக்கு என்ன நடந்தது?
என்னுடைய கணவரை இராணுவத்தினரே மறைத்து வைத்திருக்கின்றனர். எனக்கு கணவரும் என் பிள்ளைகளுக்கு அப்பாவும் வேண்டும். காலங்கள் பல கடந்து கொண்டிருக்கின்ற நிலையில் நாங்கள் மிகவும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றோம். எனக்கு எனது கணவரே வேண்டும். அவரை மீட்டுத் தந்தால் அந்தவொரு உதவியே போதுமானது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM