தமிழக மீனவர்களின் பிரச்சினையைத் தீர்க்க தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமிழக சட்டப்பேரவை தேர்தலில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். 

தாராபுரம், மதுரை ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட நரேந்திர மோடி நேற்று மாலை கன்னியாகுமரியில் அத்தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் அவர்களை ஆதரித்தும், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக -பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும் பிரச்சாரம் செய்தார்.

இந்தப் பிரச்சார பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது....

'திருவள்ளுவர் சிலையும், விவேகானந்தர் மண்டபமும் இந்தியர்களை கவர்ந்துள்ளது. இந்த மண்ணில் பிறந்த கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை, அய்யா வைகுண்டர், காமராஜர், மார்ஷல் நேசமணி உள்ளிட்டோரை நினைவு கூறுகிறேன். 

தமிழகத்தில் பல்வேறு சாதனைகளை மத்திய மாநில அரசுகள் செய்துள்ளன. கொரோனா தொற்று பாதிப்பு பரவலின் போது வெளிநாடுகளில் சிக்கி தவித்த 5 லட்சம் தமிழர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை மேற்கொண்டோம். 

ராமேஸ்வரம் -தனுஷ்கோடி இடையே ரயில்வே பாதை அமைக்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 50 ஆண்டுகளாக யாரும் கவலைப் படாத நிலையில் பாம்பனில் புதிய பாலம் கட்ட பாஜக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

தமிழகத்தின் சாலை மேம்பாட்டு பணிகளுக்காக ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு சில குடும்பங்கள் மட்டும் இந்தியாவை உருவாக்கவில்லை. 

ஒவ்வொரு இந்தியரின் வியர்வையிலும் உருவாக்கப்பட்டது. தில்லியின் மத்திய பகுதியில் ஒரு வம்சத்தின் நினைவுச் சின்னத்தை அமைக்க நிலம் கொடுத்துள்ளோம். 

திமுகவில் வாரிசு அரசியலால் மூத்த தலைவர்கள் சங்கடத்தில் உள்ளனர். வாரிசு அரசியலுக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளனர். நமது கவனம் நாட்டின் வளர்ச்சி மீதுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளுக்கு வாரிசு வளர்ச்சி மீது தான் கவனம். 

மக்களுக்கு நம்பிக்கையூட்டும் அரசாக- நல்லாட்சியின் வலுவான சாதனைகளை கொண்டு வந்துள்ளோம். எங்களது அரசு அனைவருக்குமானது. 

கட்சி பேதமற்றது. திமுக அதிமுக இரண்டு கட்சிகளின் அரசும் காங்கிரஸ் மத்திய அரசை டிஸ்மிஸ் செய்யப்பட்டன. மக்கள் நிலையை புரிந்து கொள்ளாத உயர்மட்ட அதிகார மமதையில் இருப்பதுதான் காங்கிரசின் வழக்கம். அனைவரும் இணைந்து அனைவரும் உயர வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.

புவிசார் பொருள்கள் சார்ந்த சிறு தொழில்களை ஊக்குவிப்பதில் மத்திய அரசு முனைப்பாக உள்ளது. கடற்கரைப் பிரதேசங்களை முன்னேற்ற மூன்றடுக்கு திட்டத்தை பின்பற்றுகிறோம். துறைமுகம் சார்ந்த வளர்ச்சி மற்றும் நவீன கட்டமைப்பு மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறோம். மீனவர்களுக்கு நவீன உபகரணங்கள் மற்றும் கடன் உதவியை வழங்கி வருகிறோம். மீனவர்களின் பிரச்சினையைத் தீர்க்க தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது.' என்றார்.