'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற '96' பட புகழ் நடிகை கௌரி கிஷனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

'96' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி, தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை கௌரி கிஷன். இவர் தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ஏப்ரல் 9ஆம் திகதியன்று வெளியாகவிருக்கும் 'கர்ணன்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,

'அண்மையில் எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதை பரிசோதனை மூலம் உறுதி படுத்திக்கொண்டு, மருத்துவர்களின் அறிவுரைப்படி என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். விரைவில் இத்தகைய பாதிப்பிலிருந்து மீண்டு வருவேன். அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே 'மாஸ்டர்' திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கும் கொரோனாத் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.