தாய்வானின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சுரங்கப் பாதையில் வெள்ளிக்கிழமை ரயிலொன்று தடம்புரண்டு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 36 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த விபத்தில் மேலும் 72 பேர் காயமடைந்துள்ளதாக ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக ஆரம்ப கட்ட தகவல்கள் நால்வர் உயிரிழந்தாகவும் 20 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தாகவும் கூறியிருந்தன.

பல சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு தைப்பேவிலிருந்து டைதுங் நோக்கி பயணித்த எக்ஸ்பிரஸ் ரயிலொன்றே ஹுவாலியனுக்கு வடக்கே ஒரு சுரங்கப்பாதையில் தண்டவாளத்திலிருந்து இறங்கி, சுரங்கப்பாதையின் சுவருடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்த நேரத்தில் சுமார் 350 பேர் ரயிலில் பயணித்ததாகவும் கூறப்படுகிறது.

2018 ஆம் ஆண்டில், வடகிழக்கு தாய்வானில் ஒரு ரயில் தடம் புரண்டதில் 18 பேர் இறந்தனர் மற்றும் 175 பேர் காயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.