கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி குறித்த நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக 27 பாடசாலைகள் பயன்படுத்தப்படவுள்ளதாகவும், அதில் 6 பாடசாலைகள் முழுமையாகவும் 21 பாடசாலைகள் பகுதியளவிலும் மூடப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் இந்து மகளீர் கல்லூரி, கொழும்பு இராஜகிரிய வித்தியாலயம், நாலந்தா வித்தியாலயம், கண்டி விஹாரமஹாதேவி பெண்கள் மகா வித்தியாலயம், கண்டி சுவர்ணமாலி பெண்கள் பாடசாலை, கண்டி சீதாதேவி பெண்கள் பாடசாலை ஆகியனவே  முழுமையாக மூடப்படவுள்ளன.

இந்நிலையில் மூன்றாம் தவனைக்காக குறித்த பாடசாலைகள் அடுத்த மாதம் 13 ஆம் திகதி மீளத் திறக்கப்படவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை பகுதியளவில் மூடப்படவுள்ள 21 பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக இம் மாதம் 31 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இம்முறை ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இம் மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதோடு, எதிர்வரும் மாதம் 3 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன் நிமித்தம் 39 பாடசாலைகள் பயன்படுத்தப்படவுள்ளன.

இவற்றில் 35 பாடசாலைகள் முழுமையாக மூடப்படவுள்ளதோடு, இவை மூன்றாம் தவணைக்காக எதிர்வரும் 5 ஆம் திகதி திறக்கப்படும்.

பகுதியளவில் மூடப்படும் ஏனைய நான்கு பாடசாலைகளும், இம் மாதம் 31 ஆம் திகதி மூன்றாம் தவணைக்காக திறக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.