(எம்.மனோசித்ரா)

நாடளாவிய ரீதியில் புதன்கிழமை அன்று போதைப்பொருள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட 113 சுற்றிவளைப்புக்களில் ஹெரோயின் மற்றும் கஞ்சாவுடன் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

முகத்துவாரம் பிரதேசத்தில் 9 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கஸ்கிஸை பிரதேசத்தில் பட்டோவிட்ட பிரதேசத்தில் 4 கிராம் ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொம்பே பிரதேசத்தில் 10 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கதிர்காமத்தில் மோட்டார் சைக்கிளொன்று சோதனைக்குட்படுத்தப்பட்ட போது 6 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. 

இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒரு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதோடு ஏனைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்றார்.