(எம்.ஆர்.எம்.வசீம்)

ஐக்கிய தேசிய கட்சியின் தேசிப்பட்டியல் உறுப்பினராக சரியான நேரத்தில்  சரியான ஒருவரை பாராளுமன்றத்துக்கு அனுப்புவோம். தற்போது அதற்கான சூழல் ஏற்பட்டு வருகின்றது என கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் நியமனம் தொடர்ந்து இழுபறியில் இருந்து வருவது தொடர்பாக தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்

இதுதொடர்பாக அவர்  தொடர்ந்து தெரிவிக்கையில்,

கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு பாராளுமன்றம் செல்வதற்கான மக்கள் ஆணை கிடைக்கவில்லை. இருந்தபோதும் தேசிய பட்டியலில் ஒரு ஆசனம் கிடைத்திருக்கின்றது. அந்த இடத்துக்கு தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பெயரை கட்சியின் செயற்குழு ஏற்கனவே தீர்மானித்து, அதுதொடர்பில் அவருக்கு அறிவித்திருந்தது. என்றாலும்  ரணில் விக்ரமசிங்க அதற்கான விருப்பத்தை இதுவரை தெரிவிக்கவில்லை.

அத்துடன் தலைவர் தேசியப்பட்டியல் உறுப்பினராக பாராளுமன்றத்துக்கு செல்ல மறுத்தால் பிரதி தலைவர் என்றவகையில் நான் செல்லவேண்டும் என்ற கோரிக்கையும் இருக்கின்றது. என்னை பொறுத்தமட்டில் மக்களால் தெரிவு செய்யப்பட்டால் மாத்திரமே நான் பாராளுமன்றத்துக்கு செல்வேன் என்ற கொள்கையிலேயே நான் தொடர்ந்து இருக்கின்றேன்.

இருந்தபோதும் க்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி சரியான நேரத்தில்  சரியான ஒருவரை பாராளுமன்றத்துக்கு அனுப்புவோம். நாட்டின் தற்போதை அரசியல் நிலைமையை பார்க்கும்போது அதற்கான சூழல் ஏற்பட்டு வருவதாகவே தோன்றுகின்றது. 

எவ்வாறு இருந்தாலும் பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் யாரும் இல்லாவிட்டாலும் அரசியல் ரீதியில் நாங்கள் எமது பொறுப்பை மேற்கொண்டுவருகின்றோம். அத்துடன் கிராம மட்டத்தில் கட்சியை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்திருக்கின்றோம். அத்துடன் கட்சியில் இருந்து தூரமாகி இருந்த ஆதரவாளர்கள் பலரும் மீண்டும் எம்முடன் இணைந்துகொள்கின்றனர். 

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஒன்றை எதிர்காலத்தில்  ஏற்படுத்தவேண்டும் என்ற தேவை ஆதரவாளர்களுக்கு  ஏற்பட்டிருப்பதை எங்களால் உணர்ந்துகொள்ள முடியுமாக இருக்கின்றது. அதற்கான அடித்தளத்தை தற்போது நாங்கள் ஏற்படுத்தி வருகின்றோம் என்றார்.