நல்லூர் உற்சவத்தின் விசேட திருவிழாக்கள் எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள நிலையில் அங்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் 20 கண்காணிப்பு கமராக்களையும் 500ற்கும் மேற்பட்ட பொலிஸாரையும் ஈடுபடுத்தி பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர்மேலும் தெரிவிக்கையில்,

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவமானது ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்ற நிலையில் அதன் விசேடமான திருவிழாக்கள் இன்றிலிருந்து ஆரம்பமாகின்றன. 

இந்நிலையில் நல்லூர் ஆலயத்தின் மகோற்சவத்தின் இதுவரையான காலப்பகுதியில் எந்தவிதமான சட்டவிரோதமான சம்பவங்கள் தொடர்பாகவோ அல்லது திருட்டு சம்பந்தமாகவோ எதுவிதமான முறைப்பாடுகளும் பதிவு செய்யப்படவில்லை. அத்துடன் உற்சவ காலத்தில் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக புத்தளத்தில் இருந்து வந்திருந்த ஒர் குடும்பம் உட்பட அவர்களோடு இணைந்த அனைவரையும் கைது செய்து நீதிமன்றின் ஊடாக விளக்கமறியலில் வைத்துள்ளோம். 

இவற்றைவிட நல்லூர் ஆலய சூழலில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 500க்கும் மேற்பட்ட பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதுடன் சிவிலிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும்  நல்லூர் ஆலயத்தின் அனைத்து பகுதிகளையும் கண்காணிக்கும் வகையில் 20கண்காணிப்பு கமராக்களை பொருத்தப்பட்டுள்ளது.

எனினும் உற்சவ காலத்தில் பொதுமக்கள் முடிந்தவரை தங்க ஆபரணங்களை அணிந்து வருவதை தவிர்த்து உங்கள் உடைமைகளைப் பாதுகாப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.