(எம்.மனோசித்ரா)

புற்றுநோயை ஏற்படுத்தும் மூலக்கூறுகள் அடங்கிய தேங்காய் எண்ணெய் இறக்குமதிக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமையால் மக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

புற்றுநோயை ஏற்படுத்தும் மூலக்கூறுகள் அடங்கிய தேங்காய் எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளமை தொடர்பில் கடும் சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. குறித்த கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை என்று சுங்க திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

தேங்காய் எண்ணெய் மற்றும் மரக்கறி எண்ணெய் உள்ளிட்ட இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சகல உணவு பொருட்களும் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுகின்றன. இவற்றின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு அதன் முடிவுகள் கிடைத்த பின்னரே அவற்றை சந்தைகளுக்கு விடுவிக்க அனுமதியளிக்கப்படுகிறது.

குறித்த எண்ணெய் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு முதலாவது முடிவு கிடைக்கப் பெற்ற போது மார்ச் 4 ஆம் திகதி இவற்றை சந்தைகளுக்கு விநியோகிக்கமாலிருக்க சுங்க திணைக்களத்தினால் தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அதன் முடிவில் 3 நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய்யில் புற்றுநோய் மூலக்கூறு உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களுக்கு சீல் வைக்கப்பட்டு சந்தைகளுக்கு விநியோகிக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. எனினும் ஏதேனுமொரு வகையில் இவ்விடயத்தில் தவறிழைக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் சுங்க திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இதன் போது தவறிழைத்த நபர்கள் எவரேனும் இனங்காணப்பட்டால் அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பாம் எண்ணெய் எனப்படும் மரக்கறி எண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெய் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக மரக்கறி எண்ணெய்க்கான வரியை அதிகரித்து , தேங்காய் எண்ணெய்க்கான வரி குறைக்கப்பட்டது. உலகலாவிய ரீதியில் மரக்கறி எண்ணெய் தொடர்பில் காணப்படும் சிக்கல் மற்றும் இலங்கையில் தயாரிக்கப்படுகின்ற தேங்காய் எண்ணெய்யின் உயர்தரம் என்பவற்றைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. இதனை தவறாக திரிபுபடுத்த சிலர் முயற்சிக்கின்றனர்.

இலங்கையில் பாம் எண்ணெய் மற்றும் முள்தேங்காய் எண்ணெய் என்பவற்றுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தடை விதித்துள்ளார். சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பில் பல்வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். இவ்வாறான நிலையில் பாம் எண்ணெய் இறக்குமதி செய்பவர்கள் இதன் பின்னணியிலிருந்து மக்கள் மத்தியில் வீண் அச்சத்தை ஏற்படுத்துகின்றனர்.

எவ்வாறிருப்பினும் தரத்தில் உயர்ந்த சிறந்த தேங்காய் எண்ணெய் இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகிறது. சிறியளவிலானவையே இறக்குமதி செய்யப்படுகின்றன. எனவே இறக்குமதி செய்யப்படும் சகல எண்ணெய்யும் சுகாதார அமைச்சு , சுங்க திணைக்களம் மற்றும் இலங்கை தர நிர்ணய கட்டளை நிறுவனத்தினால் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே சந்தைக்கு விநியோகிக்கப்படும்.

முள்தேங்காய் தடை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு , பொலிஸ்மா அதிபர் ஊடாக விசேட சுற்று நிரூபம் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் மாவட்ட செயலாளர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் விரைவில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும்.

மக்கள் எண்ணெய் தொடர்பில் வீண் அச்சமடைய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம். அத்தோடு சுங்க திணைக்களத்தினூடாக ஏதெனுமொரு வகையில் சர்ச்சைக்குரிய எண்ணெய் தொகை விடுவிக்கப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  எனினும் இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய அவ்வாறான சம்பவம் இடம்பெற்றதாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றார்.