(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான பலமான அரசாங்கத்தை ஸ்தாபிக்க  கட்சி உறுப்பினர்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். 

1994 ஆம் ஆண்டு சுதந்திர கட்சி ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியதை போன்று எதிர்காலத்தில்  ஆட்சியை கைப்பற்ற சிறந்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

நாட்டின் அபிவிருத்தியை கருத்திற் கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளோம் என  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

உத்தேச அரசியலமைப்பு தொடர்பிலான நிபுணர் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு தொடர்பிலான யோசனைகள் குறித்து தெளிவுப்படுத்தும் சந்திப்பு நேற்று கண்டியில் இடம் பெற்றது. 

இச்சந்தர்ப்பத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஸ்ரீ லங்கா  பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் ஒன்றிணைந்து இடம் பெற்று முடிந்த பொதுத்தேர்தலில்  போட்டியிட்டோம்.

தேர்தலில் போட்டியிடும் போது சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு  பல சவால்கள்  எழுந்தன. அனைத்து போராட்டங்களையும் சிறந்த முறையில் வெற்றிக் கொண்டோம்.   

தேர்தலின் பெறுபேறுகளுக்கு அமைய சுதந்திர கட்சிக்கு 13 ஆசனங்கள் கிடைக்கப் பெற்றன. ஒரு தேசிய பட்டியல் உறுப்பினர் ஊடாக  சுதந்திர கட்சியின் 14 உறுப்பினர்கள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.

நாட்டின் அபிவிருத்தியை கருத்திற் கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளோம். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைமையில் பலமான அரசாங்கத்தை ஸ்தாபிக்க சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். 

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி 1994 ஆம் ஆண்டு ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியது சாதாரண விடயமல்ல. சிறந்த திட்டமிடல் ஊடாக சுதந்திர கட்சி ஆட்சியை கைப்பற்றியது.

 சுதந்திரக்கட்சி எதிர்காலத்தில் ஆட்சியமைப்பதற்கு தேவையான திட்டங்கள் அடிமட்டத்தில் இருந்து செயற்படுத்தப்படுகிறது. சுதந்திர கட்சி மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றும் என்ற நம்பிக்கை காணப்படுகிறது.தற்போது மக்களின் எதிர்பார்ப்பும் அதுவாகவே காணப்படுகிறது.

இலங்கை  அரசியல் வரலாற்றில்  1959 தொடக்கம், 1980 ஆம் ஆண்டு வரை அரசியல் கட்சிகள் ஆட்சியை கைப்பற்றியதை போன்று தற்போது ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற முடியாது. 

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த இளம் தலைமுறையினரது பங்களிப்பு இன்றியமையாததாகும்.  இளம் தலைமுறையினரது தேவைகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். 2015 ஆம் ஆண்டு இளம்தலைமுறையினரது ஆதரவுடன் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.  

முற்போக்கான சிறந்த கொள்கையினையுடையவர்களை ஒன்றினைத்து சுதந்திர கட்சியின் கொள்கையினை  அடிமட்டத்தில் இருந்து செயற்படுத்துவது அவசியமாகும்.   

நாட்டின்  பிரதான அரசியல் கட்சியாக சுதந்திர கட்சி மீண்டும் எழுச்சி பெறும் அதற்கு அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.