போராதனைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவனத்தினால் பேணப்பட்டு வந்த நிலையான வைப்புக் கணக்குகளில் 50 மில்லியன் ரூபா நிதி முன்னாள் சிரேஷ்ட அதிகாரி ஒருவரால் மோசடியான முறையில் பெற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக பாராளுமன்றத்தின் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) புலப்பட்டது.

May be an image of one or more people, people standing and indoor

போராதனைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவனத்தினால் மக்கள் வங்கியின் பேராதனைக் கிளையில் பேணப்பட்டுவந்த 14 நிலையான வைப்புக்கள் 2006ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2016 டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மூடப்பட்டு பெறப்பட்ட 93 மில்லியன் ரூபாவில், 37 மில்லியன் ரூபா மாத்திரம் மீண்டும் நிலையான வைப்பில் இடப்பட்டிருப்பதுடன், எஞ்சிய 50 மில்லியன் ரூபா சிரேஷ்ட உதவி நிதி அதிகாரியினால் மோசடி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதி மோசடியுடன் தொடர்புபட்ட அதிகாரி பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருப்பதுடன், இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஊடாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. பல்கலைக்கழகத்தில் இந்த மோசடியுடன் தொடர்புபட்ட நபர்கள் குறித்து ஆராய்வதற்கு பேராதனைப் பல்கலைக்கழக மூதவையினால் ஒழுக்காற்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், இதற்கு மேலதிகமாக கணக்காய்வாளர் திணைக்களத்தினால் தண்டக் கட்டணம் அறவிடப்பட்டிருப்பதாக பாராளுமன்றத்தில் கூடிய அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் மேலும் தெரியப்படுத்தப்பட்டது.

பேராதனைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவனத்தின் 2018 மற்றும் 2019 வருடங்களுக்கான கணக்காய்வு அறிக்கை மற்றும் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக கோப் குழு கூடியிருந்தது.