ஹொங்கொங்கில் அரசியல் பங்களிப்பு மற்றும் பிரதிநிதித்துவத்தை மேலும் குறைப்பதற்கான சீனாவின் நடவடிக்கைகளை ஐக்கிய இராஜ்ஜியமும் அமெரிக்காவும் கடுமையாக கண்டித்துள்ளன.

அண்மைய மாற்றங்கள் 1984 ஆம் ஆண்டு கூட்டு பிரகடனத்தை சீனா மீறியதாக இங்கிலாந்து கூறியது. இந்த பிடகடனத்தின் கீழ் 1997 ஆம் ஆண்டில் ஹொங்கொங் சீன ஆட்சிக்கு திரும்பியது.

அப்போதைய சீனப் பிரதமர் ஜாவோ சியாங் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சர் ஆகியோர் கையெழுத்திட்ட 1984 சீன-பிரிட்டிஷ் கூட்டு பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “ஒரு நாடு, இரண்டு அமைப்புகள்” கட்டமைப்பின் கீழ் ஹொங்கொங்கின் சுயாட்சி உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

"சீனா ஹொங்கொங்கின் தேர்தல் முறைமையில் மாற்றங்களைச் செய்தது, இது கூட்டுப் பிரகடனத்தின் தெளிவான மீறலாகும் - இது ஹொங்கொங் மக்களின் சுதந்திரங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது மற்றும் பீஜிங் சர்வதேச கடமைகளை மீறுகிறது" என்று பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் செவ்வாயன்று தெரிவித்தார்.

அதேநேரம் ஹொங்கொங்கின் தேர்தல் முறைமையின் மாற்றங்களால் அமெரிக்கா “ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளது” என்றும், “அங்குள்ள உள்ள மக்களின் விருப்பத்தை” அரசாங்கம் மீறுவதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

ஹொங்கொங்கின் தேர்தல் விதிகளில் சீனா பல மாற்றங்களை திங்களன்று நிறைவேற்றியுள்ளது. 

புதிய நடவடிக்கைகள், ஹொங்கொங்கின் சட்டமன்றத்தைத் தவிர்த்து, நேரடியாக பீஜிங்கால் திணிக்கப்பட்டன, பாரிய எதிர்ப்புகளுக்குப் பின்னர் நகரத்தின் ஜனநாயக இயக்கத்தைத் தகர்த்தெறியும் நோக்கில் இது அமைந்துள்ளதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சீனாவின் உயர்மட்ட முடிவெடுக்கும் குழுவால் ஏகமனதாக ஒப்புதல் பெற்ற பின்னர் ஜனாதிபதி ஜி ஜின்பிங் இந்த சட்டத்தில் கையெழுத்திட்டார்.