(இராஜதுரை ஹஷான்)

சேவையில் இருந்து தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு - பதுளை தேனுவர மெனிக்கே புகையிரத சேவை நாளைமறுதினம் முதல் மீண்டும் வழமை நிலைக்கு திரும்பும்.

பண்டிகை காலத்தினை கருத்திற்கொண்டு நாளைமறுதினம் தொடக்கம் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை இப்புகையிரதம் சேவையில் ஈடுப்படுத்தப்படும் என புகையிரத  நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார்.

புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள  அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தேனுவர மெனிக்கே புகையிரதம் நாளைமறுதினம் காலை 6.30 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து புறப்பட்டு மாலை 3  மணியளவில் பதுள்ளை புகையிரத நிலையத்தை சென்றடையும்,அத்துடன்  மறுநாள் காலை 8 மணிக்கு பதுள்ளை புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை புகையிரதம் நோக்கி புறப்படும்.

பண்டிகை காலத்தை முன்னிட்டு இப்புகையிரதம் நாளைமறுதினம்  முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை போக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்படும். முதல் , இரண்டாம், மற்றும் மூன்றாம் வகுப்புக்களில் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் செயற்படுத்தப்பட்டுள்ளன.

கொவிட்-19 வைரஸ் தாகக்த்தின் காரணமாக  தேனுவர மெனிக்கே புகையிரத சேவை கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி இடை நிறுத்தப்பட்டிருந்தது. புத்தாண்டு  காலத்தை முன்னிட்டு இப்புகையிரத சேவையினை மீள ஆரம்பிக்குமாறு  பொது பயணிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது