(இராஜதுரை ஹஷான்)

இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயன பதார்த்தங்கள் கலக்கப்பட்டுள்ளன என்பது முறையான ஆய்வுகள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்த தரப்பினருக்கே இந்த எண்ணெய் கொள்கலன்களை மீள்ஏற்றுமதி செய்ய  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

உடலாரோக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய் சந்தையில் விற்பனை செய்யப்படவில்லை என்பதை உறுதியாக குறிப்பிட முடியும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வர்த்தகத்துறை அமைச்சில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு  கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நச்சு தன்மையான தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு அவை  சந்தையில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதுஎனவும், இம்முறை புத்தாண்டினை கொண்டாட முடியாத நிலை ஏற்படுட்டுள்ளது எனவும் எதிர் தரப்பினர் தவறான அரசியல் பிரசாரங்களை முன்னெடுத்து செல்கிறார்கள்.

இறக்குமதி செய்யப்படும் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் மாதிரிகளும் சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவிலும், தரசான்றுகள் நிறுவனத்தினாலும் பரிசோதனை செய்யப்படும்.

அறிக்கைகளின் பெறுபேற்றை அடிப்படையாகக் கொண்டு அப்பொருட்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படும். அதுவரையில் குறித்த பொருட்கள் சுங்க திணைக்களம் வசம்  இருக்கும்.

அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய  எப்லடொக்சின் காசினோஜென் என்ற இரசாயன பதார்த்தம் அடங்கியுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவு கடந்த 4 ஆம் திகதி சுங்கத்திணைக்களத்தின் பணிப்பாளருக்கு அறிவித்தது. 

இவ்விடயம் தொடர்பில் சுங்கத்திணைக்களம் தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்த நிறுவனத்துக்கு அறிவித்தது.

தேங்காய் எண்ணெய் தொடர்பிலான பரிசோதனைகளை மீள்பரிசீலனை செய்யுமாறு குறித்த நிறுவனத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

குறித்த எண்ணெய் தாங்கிகளை, தொடர்ந்து சுங்க திணைக்களத்தில் வைத்திருக்க முடியாத நிலை காரணமாகவே, இறக்குமதி செய்த நிறுவனத்தில் களஞ்சியசாலையில் எண்ணெய் தாங்கிகள்  களஞ்சியப்படுத்தப்பட்டதுடன் விற்பனை செய்ய  அனுமதி வழங்கவுவில்லை.  களஞ்சியசாலையும்  சீல் வைக்கப்பட்டது.

இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயில்  புற்றுநோயயை ஏற்படுத்த கூடிய நச்சு பதார்த்தம் காணப்படுகிறது என்பது இரண்டாவது முறையாக  முன்னெடுத்த  பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

ஆகவே,  தேங்காய் எண்ணெய்யை இறக்குமதி செய்த தரப்பினருக்கே அதனை மீள்ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணெய் சந்தைகளில் விற்பனை செய்யப்படவில்லை. 13 கொள்கலன்கள்  விற்பனைக்காக வெளியிடப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்படும் செய்தி முற்றிலும் பொய்யானது. 

பொது மக்களின் சந்தேகத்தை தீர்த்து வைக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. தேசிய நுகர்வோர் அதிகார சபையினர் நாடு தழுவிய ரீதியில் உள்ள விற்பளை நிலையங்களில் தேங்காய் எண்ணெய் கொள்வனவு செய்த திகதியை அடிப்படையாகக் கொண்டு எண்ணெய் மாதிரிகளை பெற்றுக் கொண்டுள்ளார்கள். 

அவை முறையான பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன. அறிக்கை பகிரங்கப்படுத்தப்படும் என்றார்.