தற்போதைய அரசியல் தலைவர்கள் பல வகையான அரசியல் மாதிரிகளைப் பின்பற்றுகின்றார்கள். அவற்றில் சாணக்கிய அரசியல், சண்டித்தனமான அரசியல் என்பவையும் அடங்கும். 

சாணக்கிய அரசியல் என்பது மதி நுட்பம், தர்க்கம், பகுத்தறிவு, காரண காரியத்தொடர்பு என்பவற்றுடன் தொடர்புபட்டது. சாணக்கிய அரசியல் இராஜதந்திரம், தந்திரோபாயங்களுடன் ஆழமான தொடர்புடையது.

குறிப்பாக அபிவிருத்தியடைந்த முற்போக்கான ஜனநாயக நாடுகள் இப்படியான சாணக்கிய அரசியலைப் பின்பற்றி வெற்றியடைகின்றன. வேகமாக அபிவிருத்தியடையும் நாடுகளும் இப்படியான அணுகுமுறைகளைக் கையாள்வதுண்டு. 

இவ்வணுகுமுறையுடைய சாணக்கியமான நாடுகள் உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தமது இறைமை, ஆளுமைகளால் பெருமளவில் தீர்ப்பதன் மூலம் வெற்றி கொள்ளுகின்றன. அந்நாடுகள் சர்வதேசப் பிரச்சினைகளையும் தீர்க்கின்றன அல்லது தீர்க்க முயலுகின்றன, வெற்றியும் காணுகின்றன.

ஆனால் சண்டித்தனமான அரசியலைப் பயன்படுத்துகின்ற ஆட்சியாளர்கள் தமது உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல் தள்ளாடுகின்றனர். இப்படியானவர்கள் குறுகிய அடிப்படை வாதங்களால் தேர்தல் வெற்றிகளைப் பெற்றாலும், உள்நாட்டுப் பிரச்சினைகளைத தீர்க்காமல் மேலும் சிக்கல்களை உருவாக்குகின்றனர். அடிப்படை வாதம், பிரித்தாளும் தந்திரம், அடக்குமுறை, அராஜகம், அழிப்புச் செயல் போன்றவை சண்டித்தனமான அரசியலின் இலட்சணங்களாகும். 

இத்தகைய போக்குடைய தலைவர்கள் உள்ளகப் பிரச்சினைளைத் தீர்க்காமல் வளர்த்து சர்வதேச வலையில் சிக்கவைக்கின்றனர். அல்லது சர்வதேசமயப்படுத்துகின்றனர். அதாவது ஐக்கிய நாடுகள் சபை வரை உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தள்ளிவிடுகின்றார்கள். அதன் பின்னர் உள்நாட்டில் கையாண்ட சண்டித்தனமான அரசியல் முறைமைகளைச் சர்வதேசத்திலும் கையாண்டு தோல்வியடைகின்றார்கள். 

இதனையே இலங்கையரசும் செய்துள்ளதாகவே உணரமுடிகின்றது. இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை 73ஆண்டுகளாகத் தீர்க்கப்படவில்லை. மேலும், 2009இல் யுத்தம் முடிந்த பின்னர் 12 ஆண்டுகளாக உண்மைக்கும் நீதிக்குமாக வடக்கு - கிழக்குத் தமிழர்கள் ஜனநாயக வழியில் போராடுகின்றார்கள். அப்பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை. மாறாக அறவழிப் போராட்டங்களை அடக்கியொடுக்க அடாவடி நடவடிக்கைகளைக் கையாளுகின்றனர். 

இப்படியான நிலையில், இப்பிரச்சினை 2009 இற்குப் பின்னர், ஐக்கிய நாடுகள் சபையின் கைகளுக்குள் அகப்பட்டுள்ளது. 2019, 2020களில் இலங்கையில் ஆட்சியைக் கைப்பற்றிய பொதுசனப்பெரமுன அரசாங்கம் ஐ.நா மனிதவுரிமைகள் பேரவையால் நிறைவேற்றப்பட்ட 40-1 பிரேரணையை நிராகரித்தது.