(ரி.விரூஷன்)

யாழ்ப்பாணம், காரைநகர் பகுதியில் பதினாறு வயது மாணவியொருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்த நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரியவந்துள்ளதாக யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை  காரைநகர் திக்கரையைச் சேர்ந்த சண்முகராஜக் குருக்கள் துவாரகா எனும் பதினாறு வயது மாணவியொருவர் இரவு வீட்டில் இருந்து காணாமல் போயிருந்த நிலையில் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை அவரது வீட்டில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் இருந்த காணியொன்றின் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து குறித்த மாணவியின் மரணம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். 

இந்நிலையில் குறித்த மாணவியின் சடலமானது மருத்துவ பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

மாணவியின் மரணம் தொடர்பாக யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவிக்கையில்,

பெண்ணின் மரணம் தொடர்பில் அவரது சடலத்தை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன்    அடிப்படையில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த மாணவியின் மரணம் தொடர்பில் இணைய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் மாறுபட்ட கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளன. 

எனவே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும்போது அதன் முழுமைத்தன்மைகளை ஆராய்ந்தறிந்து அதன் பின்னரே செய்தி அறிக்கையிடலை மேற்கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்தார்.