(எம்.மனோசித்ரா )

இந்தியாவின் கொவிஷீல்ட் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கு ஏப்ரல் 19 ஆம் திகதி முதல் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும்.

இதற்கு தேவையான தடுப்பூசிகள் கைவசம் இருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

இரண்டாம் கட்டமாக தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் ஏப்ரல் 19 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளன. 

அதற்கு தேவையான தடுப்பூசி தொகை கையிருப்பில் உள்ளன. உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைக்கமைய 12 வாரங்களின் பின்னர் இரண்டாம் கட்டமாக தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் குறித்த காலவரையறைக்குள் இரண்டாம் கட்டமாக தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு வெகுவிரைவில் அதனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்நிலையில் சீனாவில் தயாரிக்கப்படும் 6 மில்லியன் சைனோஃபார்ம் கொவிட் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளன. 

நாளை இவை நாட்டை வந்தடையும் என்று எதிர்பார்க்கின்றோம். சைனோஃபார்ம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றவுடன் உரிய தரப்பினரை தேர்ந்தெடுத்து அவற்றை வழங்க எதிர்பார்த்துள்ளோம் என்றார்.