(எம்.மனோசித்ரா)

எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் கிடையாது. 

2019, 2020 ஆம் ஆண்டுகளில் உலக சந்தையில் பெற்றோல் மற்றும் டீசல் விலை பாரியளவில் வீழ்ச்சியடைந்தபோது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பெற்றுக்கொண்ட 25 ஆயிரம் கோடி ரூபா இலாபத்தின் மூலம் தற்போதேனும் நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபிர் ஹசீம் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கத்திற்குஅதிகாரம் கிடையாது. கொவிட் காலத்தில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு இலாபம் கிடைக்கப் பெற்றது. 

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் எண்ணெயில் 70 வீதமானவை சுத்தீகரிக்கப்பட்டவையாகும். 30 வீதம் மாத்திரமே மசகு எண்ணெய்யாகும்.

2019 நவம்பர் 19 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியை பொறுப்பேற்ற அன்றைய தினம் பெற்றோல் தாங்கியொன்றினை இறக்குமதி செய்வதற்கு 71.47 டொலர் மாத்திரமே செலவிடப்பட்டது. 

அன்று இலங்கையில் பெற்றோர் லீற்றர் 137 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. 2020 ஏப்ரல் 20 ஆம் திகதி பெற்றோல் தாங்கியொன்றின் விலை 18 டொலராக வீழ்ச்சியடைந்தது. இது பாரியதொரு விலை வீழ்ச்சியாகும். 

இதன்போதும் இலங்கையில் பெற்றோல் லீற்றர் 137 ரூபாவிற்கே விற்பனை செய்யப்பட்டது. இந்த காலக்கட்டத்தில் அரசாங்கத்திற்கு பெற்றோல் லீற்றரொன்றுக்கு 120 ரூபா இலாபம் கிடைக்கப் பெற்றது.

இதேபோன்று 2019 இல் டீசல் தாங்கியொன்றின் விலை 74 டொலராகவே காணப்பட்டது. எனினும் இலங்கையில் ஒரு லீற்றர் டீசல் 104 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. 

2020 ஏப்ரலில் டீசல் தாங்கியொன்றின் விலை 28 டொலராக வீழ்ச்சியடைந்தது. எனினும் இதன் போதும் இலங்கையில் பழைய விலைக்கே டீசல் விற்பனை செய்யப்பட்டது. 

உலக சந்தையில் 2020 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை பெற்றோல் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டிருந்த போதிலும் இலங்கை மக்களுக்கு அதன் பயன்கிடைக்கப்பெறவில்லை.

கொவிட் காலத்தில் எரிபொருள் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டிருந்தமையால் அரசாங்கத்திற்கு 25,000 கோடி ரூபா இலாபம் கிடைக்கப் பெற்றது. 

இந்த இலாபத்தை சேமிப்பிலிட்டு உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கும்போது, இலங்கையின் விலையை அதிகரிக்காமலிருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 

எனினும், தற்போது எரிபொருள் விலையை அதிகரிக்க நேரிடும் என்று அவரே கூறுகின்றார். எனவே, இவ்வாறான பின்னணியில் எரிபொருள் விலையை அதிகரிக்க எவ்வித அதிகாரமும் கிடையாது என கபிர் ஹசீம் தெரிவித்தார்.