தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவினால் கடந்த அரசில் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தினால் பல்வேறு குடும்பங்கள் பலன் அடைந்தார்கள். ஆனால், வீட்டுத்திட்டத்தை பெற்ற பல குடும்பங்கள் இன்று கடன் காரரர்களாக காணப்படுகின்றனர் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுமார் 7 இலட்சம் ரூபா பெறுமதியான வீடுகளுக்கு  சுமார் ஒரு இலட்சம் ரூபா முதல்  2 இலட்சம் ரூபாய்  மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

புதிய வீடுகளை அமைப்பதற்காக தமது பழைய வீடுகளை அகற்றி வீடுகளை கட்டும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

தமது உடமைகளை அடகு வைத்தும், வங்கிகளில் கடனை பெற்றும் அதி கூடிய வட்டிக்கு பணத்தை பெற்றும் வீடுகளை கட்டும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டே குறித்த வீட்டுத்திட்டம் அரசினால் வழங்கப்பட்டது.

ஆனால், தற்போது குறித்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கும் இடர்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.

தற்போதைய அரசுகூட பாதிக்கப்பட்ட மக்களின் வீட்டுத்திட்டப் பிரச்சினையை நிவர்த்தி செய்ய அக்கறை காட்டவில்லை.

தற்போதைய எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கடந்த அரசாங்கத்தில் வழங்கியதன் காரணத்தினாலேயே தற்போதைய அரசாங்கம் அக்கறை காட்டவில்லை என தெரிகின்றது.

தற்போது எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, குறித்த வீட்டுத்திட்டம் தொடர்பில் வாய் திறக்க கஷ்டப்படுகின்றார்.

பல்வேறு விடயங்களை அவர் பாராளுமன்றத்தில் கதைத்தாலும்கூட வீட்டுத்திட்டப் பிரச்சினையில் அவர் வாய் மூடி மௌனம் காக்கின்றார். இவ்விடயத்திற்கு அவரும் குரல் கொடுக்கவேண்டும்.

மன்னார் மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்தை பெற்று கொடுப்பணவுகள் கிடைக்காத மக்களை ஒன்றிணைத்து மன்னாரில் முதல் கட்டமாக நாளை செவ்வாய்க்கிழமை(30) காலை ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்க உள்ளோம்.

அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வீட்டுத்திட்டத்திற்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பணவுகளை உடனடியாக வழங்க கோரி குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

வீட்டுத்திட்டத்தை பெற்று நிதி உரிய முறையில் கிடைக்காதவர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு வழங்கவேண்டும்.

அதனைத் தொடர்ந்து வவுனியாவிலும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது எனவும் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.