இன்றைய காலங்களில் உடலுழைப்பு குறைவு உடற்பயிற்சியின்மை ஆகியவற்றோடு சத்தற்ற மற்றும் உடலின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் உணவு பொருள்களை சாப்பிட பழக்கப்படுத்திக் கொண்டுவிட்டோம். அதிலும் பெண்கள் தற்காலத்தில் ஓரளவிற்கு பொருளாதார சுதந்திரம் பெற்று வருவதால் தங்களின் ஆரோக்கிய விடயத்தில் கட்டுப்பாடு இல்லாமல் இவர்களும் நாவின் சுவைக்கு அடிமையாகி இரசாயனம் கலக்கப்பட்ட பொருள்களை வாங்கி சாப்பிடுகிறார்கள். இதனால் இவர்களுக்கு மாதந்தோறும் வரவேண்டிய மாதவிடாய் சுழற்சியில் தடை ஏற்படுகிறது. அத்துடன் திருமணத்திற்கு பின்னரான மகப்பேற்றின்மைக்கு 70 சதவீத காரணமாகத் திகழும் பொலிஸிஸ்டிக் ஓவரி நோய்க்கும் ஆளாகிறார்கள்.

இந்த பொலிஸிஸ்டிக் ஓவரீஸ் நோய்க்கு ஆளாகும் பெண்களுக்கு மாதவிடாய் சீராக வருவதில்லை. அத்துடன் உடலில் ஆண்தன்மையுள்ள ஹோர்மோன்களின் எண்ணிக்கை இயல்பை விட அதிகளவில் உருவாகின்றன. அத்துடன் கருமுட்டையைச் சுற்றிலும் ஆரோக்கியமற்ற திரவதிசுப்படலங்கள் படர்வதற்கும் அடித்தளமாகின்றன. இவை மகப்பேற்றின்மையை மட்டும் எற்படுத்துவதில்லை. அத்துடன் டைப் 2 நீரிழிவிற்கும் காரணமாக அமைகின்றன. அதாவது இன்சுலீன் சுரப்பில் இவை தலையிட்டு அதன் உற்பத்தியிலும், செயல்பாட்டிலும் இடையூறு ஏற்படுத்துகின்றன. மேலும் ஒரு சிலருக்கு இதயத்தில் சில பாதிப்புகளையும் இவை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் மருத்துவ விஞ்ஞானிகள் இதனை கட்டுப்படுத்துவது குறித்த ஆய்வினை மேற்கொண்டபோது, சோயாவினால் தயாரிக்கப்பட்ட உணவினையும் பாலினையும் அருந்தினால் இந்நோய்க்கு உடனடியாக நிவாரணம் கிடைப்பதும், சிலருக்கு குணமடைவதையும் கண்டறிந்திருக்கிறார்கள். அத்துடன் தொடர்ச்கியாக 12 வாரங்களுக்கு சோயாவினால் தயாரிக்கப்பட்ட உணவை உண்ட பெண்கள், பொலிஸிஸ்டிக் ஓவரிஸ் நோயின் பாதிப்பிலிருந்து மீண்டு குணமடைந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

அதேசமயத்தில் சோயாவை பயன்படுத்தி வந்தால் பொலிஸிஸ்டிக் ஓவரிஸ் குணமடைவதைப் போல், இதய பாதிப்பு, குருதியில் குறிப்பிட்ட அளவைவிட அதிகளவிலான கொழுப்பு இருப்பதால் ஏற்படும் ஹைபர்லிபிடெமியா, ஓஸ்டியோபோரோசிஸ் எனப்படும் கல்சியம் மற்றும் விற்றமின் டி ஆகிய குறைபாட்டில் எலும்புகளுக்குள் ஏற்படும் சேதாரத்தால் உருவாகும் வலி மற்றும் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகள் ஆகியவற்றிற்கான நிவாரணமாகவும் சோயாபீன்ஸ் இருப்பதாகவும் இந்த ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

எனவே பெண்கள் மற்றும் ஆண்கள் தங்களுடைய உணவு பழக்கவழக்கங்களில் சோயாவால் தயாரிக்கப்படும் உணவு வகைகளை மருத்துவர்களின் அறிவுரை மற்றும் ஊட்டசத்து நிபுணர்களின் பரிந்துரையின் பேரில் சாப்பிட்டு வந்தால் இத்தகைய பாதிப்புகளிலிருந்து விடுபட இயலும்.

டொக்டர் புவனேஸ்வரி M.D.,

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்