விடுதலைப்புலிகள் அமைப்பின் கொள்கைகளை பரப்பும் வகையில் யூடியூப் மற்றும் இணையதளத்தில் செய்திகளை பதிவிட்ட பெண் உட்பட இரு சந்தேக நபர்கள் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த சந்தேகநபர்கள் இருவரும் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

விடுதலைப்புலிகள் அமைப்பின் தீவிரவாத கொள்கைகளை பரப்பும் வகையில் செயற்படுகின்ற இணையத்தளம் மற்றும் யூடியூப் தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு பல தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. 

இவ்வாறு கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கமைய 'குறித்த யூடியூப் மற்றும் இணையத்தளம் என்பவற்றை நிர்வகித்த அலுவலகம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பின் செயற்பாடுகளை பரப்பும் வகையிலான செய்திகள் இவற்றினூடாக வெளியிடப்பட்டுள்ளன. 

யாழ்ப்பாணத்தில் நாவலர் வீதியில் இவற்றை நிர்வகிக்கும் அலுவலகம் இயங்கிவந்துள்ளது.

 குறித்த அலுவலகத்திலிருந்த 35 வயதுடைய பெண் ஒருவரும் , 36 வயதுடைய ஆண் ஒருவரும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 5 மடிக்கணனிகள் உள்ளிட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

2011 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய விடுதலை புலிகள் அமைப்பின் கொள்கைகளைப் பரப்புதல் , அவ் அமைப்பின் சின்னத்தை வைத்திருத்தல் , இலங்கையில் பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிடுதல் என்பவை குற்றமாகும்.

அதற்கமையவே குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கொழும்பு பயங்ரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டு பயங்கரவாததடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளனர் என்றார்.