(நா.தனுஜா)

நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்காகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மறுசீரமைப்பு செயற்திட்டத்தின் கீழ் மத்திய கொழும்பு ஆசனத்திற்கான கட்சி மத்தியகுழு நியமன நிகழ்வு ஞாயிற்றக்கிழமை இடம்பெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார். 

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

மத்திய கொழும்பு ஆசனத்தில் மாத்திரமன்றி, நாடளாவிய ரீதியிலுள்ள சுதந்திரக்கட்சியின் அனைத்து ஆசனங்களும் முழுமையாக மறுசீரமைக்கப்பட்டு புதிய மத்தியகுழு நியமிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 

அதுமாத்திரமன்றி, கட்சியை மேலும் வலுப்படுத்தி, நாட்டுமக்களின் ஆதரவைத் திரட்டிக்கொண்டு முன்நோக்கிப் பயணிப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவினால் 1951 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஸ்தாபிக்கப்பட்டதுடன் அதன் பொதுச்செயலாளர்களாக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய மூவினங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மூவர் நியமிக்கப்பட்டார்கள். 

அவரைத்தொடர்ந்து ஆட்சிபீடமேறிய சிறிமாவோ பண்டாரநாயக்கவும் நாட்டின் பொருளாதாரத்தில் பாரியதொரு புரட்சியை ஏற்படுத்தினார். 

அக்காலப்பகுதியில் முதலாளித்துவ நாடுகளுக்கும் சோசலிச நாடுகளுக்கும் இடையில் 'யார் அதிகாரத்தைக் கைப்பற்றுவது?' என்ற அதிகாரப்போட்டியொன்று காணப்பட்டது.

அதன்காரணமாகவே எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவினால் அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்துக்கொண்டு இயங்கக்கூடிய வகையிலான வெளிநாட்டுக்கொள்கை பேணப்பட்டது. 

அதேபோன்று சிறிமாவோ பண்டாரநாயக்கவின் கொள்கைள் ஊடாக அனைத்து சர்வதேச நாடுகளும் எமது நட்புநாடுகளாகத் திகழ்ந்தன.

அவரைத்தொடர்ந்து நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் போர் இடம்பெற்ற காலப்பகுதியில்கூட மிகவும் சிறந்த செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். 

அதன்பின்னர் மகிந்த ராஜபக்ஷ போரை முடிவிற்குக்கொண்டுவந்து நாட்டினதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் தலைவர் என்றவகையில் ஒருமித்த நாட்டை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தார். 

பண்டாரநாயக்க குடும்பம் நாட்டை ஆண்ட காலப்பகுதியிலேயே இலங்கை தொடர்பில் சர்வதேச சமூகம் பெருமளவில் அறிந்துகொண்டது.

மேலும் நான் ஜனாதிபதியாகப் பதவிவகித்த காலப்பகுதியில் எமது நாடு தொடர்பில் சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெற்றுக்கொண்டேன். 

இந்நிலையில், எமது நாட்டின் பிரச்சினைகளுக்கு நாமே தீர்வுகாணும் நோக்கிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மேலும் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். 

நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்காகவே நாம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குகின்றோம். 

அதுமாத்திரமன்றி, கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உள்ளடங்கலாக நாட்டின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான செயற்திட்டங்களைத் தயாரிக்கும் பணிகளையும் கட்சியின் உபகுழுக்களிடம் கையளித்திருக்கின்றோம் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.