(ரொபட் அன்டனி)

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ஒருபோதும் இணைக்க முடியாது. புதிய அரசியலமைப்பின் ஊடாக  வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்க முயற்சித்தாலும் அதற்கு  சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக மக்கள்  இடமளிக்கமாட்டார்கள். எனவே ஒருபோதும் நிறைவேறாத ஒரு கனவுக்காக   சம்பந்தன் நாடகமாடிக்கொண்டிருக்கின்றார் என்று கூட்டு எதிரணியின் தலைவரும்  பாராளுமன்ற உறுப்பினருமான  தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

 

இந்தியாவையும் மீறிய  சர்வதேச  சக்தி ஒன்றின் கைப்பொம்மையாக இன்று கூட்டமைப்பின் தலைவரும்   எதிர்க்கட்சித் தலைவருமான  சம்பந்தன் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்.

 ஆனால்  அவர் எவ்வாறுதான் முயற்சித்தாலும்   ஒருபோதும் வடக்கையும் கிழக்கையும்  இணைக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். 

இணைந்த வடக்கு கிழக்கில்  சமஷ்டி அடிப்படையிலான அரசியல்  தீர்வை வழங்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற நிலைமை தொடர்பாக விபரிக்கையிலேயே  கூட்டு எதிரணியின் தலைவர் தினேஷ் குணவர்தன எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.