இலங்கையில் கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 561ஆக அதிகரித்துள்ளது.

இறுதியாக இரண்டு கொரோனா உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

 

கொழும்பு மற்றும் மாவனெல்ல ஆகிய பகுதிகளிலேயே இரண்டு உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

கொழும்பு – 15 பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஆண்ணொருவர் மாவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த முதலாம் திகதி உயிரிழந்துள்ளார்.

மாவனெல்ல பகுதியைச் சேர்ந்த 35 வயதான ஆண்ணொருவர், டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி மாவனெல்ல ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். 

இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 92 ஆயிரத்தை  கடந்துள்ளது. 

இன்று ஞாயிறுக்கிழமை இரவு 9.30 மணி வரை 237 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 92 076 ஆக உயர்வடைந்துள்ளது.

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 88 623 பேர் குணமடைந்துள்ளதோடு , 2993 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை இன்று காலை வரை 8 இலட்சத்து 94 053 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.