மதம், கலாச்சாரம், மொழி அடிப்படையில் இந்த சமூகம் பிரிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, அரசியல் சாசன நடைமுறைகளையும் ஜனநாயக தத்துவங்களையும் உயர்த்திப் பிடிக்கும் அரசை மக்கள் தெரிவு செய்யவேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அஸ்ஸாம் சட்டப்பேரவைக்கு மார்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 6 என 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங் பிரச்சாரம் செய்யும் காணொளி நேற்று வெளியிடப்பட்டது.

காணொளியில் அவர் பேசியிருப்பதாவது...

'' சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பு உங்களுக்கு மீண்டும் வந்திருக்கிறது. இந்தத் தேர்தலில் அறிவுபூர்வமாக வாக்களிக்க வேண்டும். 

உங்களுடைய எதிர்காலமும், உங்களின் குழந்தைகளுடைய எதிர்காலம் உங்கள் கையில் தான் உள்ளது. இப்போது நாட்டில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. 

பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி நடைமுறை உள்ளிட்ட செயற்பாடுகள் காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். 

பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருப்பதோடு பெற்றோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் பன்மடங்காக உயர்த்தப்பட்டிருக்கிறது. 

இதனால் சாதாரண மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். ஏழை மக்கள் மேலும் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு அவர்களின் நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது.

எனவே, அனைவருக்குமான ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில், அரசியல் சாசன நடைமுறைகளையும், ஜனநாயகத் தத்துவங்களையும் உயர்த்திப் பிடிக்கும் அரசை மக்கள் தெரிவுசெய்ய வேண்டும். 

இந்த சமூகம் மதம், கலாச்சாரம், மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் அனைத்து சமூகத்தினரின் நலனைக் காக்கும் அரசை மக்கள் தெரிவு செய்ய வேண்டும். 

அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என்பதுடன் அது இரத்து செய்யப்படும்' என்றும் அந்த காணொளி பிரசாரத்தில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.