(இராஜதுரை ஹஷான்)

காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்த  உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியமாகும். ஜெனிவா விவகாரத்தில் மாகாண சபை தேர்தல் விவகாரம் குறித்து அதிகம் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் சர்வதேசம் தலையிட முடியாது என குறிப்பிட முடியாது. ஏனெனில் இலங்கை ஜனநாயக கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு சர்வதேசத்துடன் ஒன்றிணைந்துள்ளது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரரணை குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை இலங்கையின் இராஜதந்திர உறவும், இலங்கை மீது சர்வதேசம் கொண்டுள்ள பார்வை குறித்தும் அதிகம் ஆராய நேரிட்டுள்ளது. 

இலங்கைக்கு ஆதரவாக 11 நாடுகள் மாத்திரமே வாக்களித்துள்ளன. கடந்த காலங்களில் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்ட ஆசிய நாடுகள்  மத்திய நிலை வகித்துள்ளன. இவற்றில் இந்தியா, ஜப்பான் ஆகிய நட்பு நாடுகளை பிரதானமாக குறிப்பிட வேண்டும்.

மத்திய நிலை வகித்த நாடுகள் இலங்கைக்கு சார்பாக செயற்பட்டுள்ளது என கருத முடியாது. 14 நாடுகள் இலங்கை விவகாரம் தமக்கு தேவையற்றது என ஒதுங்கியுள்ளன.

இவ்விடயம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். ஜெனிவா விவகாரத்தில் அரசாங்கம் சற்று வினைத்திறனான முறையில் செயற்பட்டிருக்கலாம் என்று தற்போது கருதப்படுகிறது.

சர்வதேச நாடுகளுக்கு அடிபணிய முடியாது என பேச்சளவில் மாத்திரமே குறிப்பிட முடியும். இலங்கையின் ஒரு சில உள்ளக விவகாரங்களில் சர்வதேசம் கவனம் செலுத்தும் இலங்கை ஜனநாயக கோட்பாட்டை முன்வைத்து சர்வதேசத்துடன் ஒன்றிணைந்துள்ளது. ஆகவே ஜனநாயக விவகாரங்கள் குறித்து சர்வதேசம் கேள்வி எழுப்பும்.

காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை  விரைவாக நடத்துவது குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும்.

ஜெனிவாவில் மாகாண சபை தேர்தல் குறித்து அதிகம் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.மாகாண சபை தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமைக்கு கடந்த அரசாங்கத்தில் இரு அரச தலைவர்களும் பொறுப்பு கூறவேண்டும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குவது கட்டாயமானது. இதனையே சர்வதேசமும் ஆரம்பத்தில் இருந்து வலியுறுத்துகிறது. 

இலங்கையின் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்க முடியும். சமர்பிக்கப்பட்டுள்ள சர்வகட்சிதலைவர் குழு அறிக்கையில் அதற்கான பொறிமுறைகள் உள்வாங்கப்பட்டுள்ளன. சர்வ கட்சி தலைவர் குழு அறிக்கையினை செயற்படுத்தியிருந்தால் பல பிரச்சினைகளுக்கு இன்று தீர்வு கிடைக்கப்பெற்றிருக்கும் என்றார்.