(இராஜதுரை ஹஷான்)

இடம்பெறவுள்ள மாகாண சபை தேர்தலில் சுதந்திர கட்சியை ஒன்றிணைத்து  கூட்டணியாக போட்டியிட தீர்மானித்துள்ளோம். 

சுதந்திர கட்சியினர் தனித்து  போட்டியிடுவதாக குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். இவர்கள் தனித்து செல்வதால் பொதுஜன பெரமுனவிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

பலமான கட்சிகள் பல கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

நாவல பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலிலும் , பொதுத்தேர்தலிலும் கூட்டணியமைத்து போட்டியிட்டது. 

அனைத்து தரப்பினரது ஒத்துழைப்பின் ஊடாகவே பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை பெற்றுக் கொண்டது. 

இடம்பெறவுள்ள மாகாண சபை தேர்தலில் அனைத்து கூட்டணியமைத்து போட்டியிட தீர்மானித்துள்ளோம்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளமை அறிய முடிகிறது.  

சுதந்திர கட்சியினர் தனித்து செல்வதால் பொதுஜன பெரமனவிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

பொதுஜன பெரமுனவில்  பலம் வாய்ந்த கட்சிகள் உள்ளன.அக்கட்சிகளுடன் ஒன்றிணைந்து கூட்டணியாக போட்டியிடுவோம்.

சுதந்திரக் கட்சியின் ஒரு சில உறுப்பினர்களுக்கும், பொதுஜன பெரமுனவின் ஒரு சில உறுப்பினர்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் காணப்படுவது இயல்பானதொன்று, ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் ஊடாக சுதந்திர கட்சியை பலவீனப்படுத்த முயற்சிப்பதாக சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளமை கவனத்திற்குரியது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பு கூற வேண்டும் என்பது நாட்டு மக்கள் அனைவரும் அறிந்த விடயம். முப்படைகளின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். 

மக்கள் குறிப்பிட்ட விடயத்தையே  ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

ஏப்ரல் 21 குண்டுத்தர்குதல் சம்பவம் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையினை கொண்டு கூட்டணியின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது. 

கூட்டணியில் காணப்படும் முரண்பாடுகளுக்கு பேச்சுவார்த்தை ஊடாக மாத்திரம் தீர்வுகாண முடியும்.பொதுஜன பெரமுன மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும் அமோக வெற்றிப் பெறும் என்றார்.