பிரபல பின்னணி பாடகி 'பாடும் வானம்பாடி' பி சுசீலா அவர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு கலைமாமணி விருது வழங்கப்பட்டிருக்கிறது.

'பாடும் வானம்பாடி' பி சுசீலா அவர்கள் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கிறார். 

சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை ஐந்து முறை வென்று சாதனை படைத்திருக்கும் இவர், இந்திய அரசு வழங்கும் உயரிய விருதான பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகளையும் வென்றிருக்கிறார்.

இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் சிறப்பு கலைமாமணி விருது இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது. அதனை பின்னணி பாடகி பி. சுசீலா தமிழக அரசின் இயல் இசை நாடக மன்றம் வழங்கி கௌரவித்திருக்கிறது.

இதற்காக அண்மையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் கொரோனா பெருந்தொற்று பரவல் அச்சம் காரணமாக வைத்தியர்களின் அறிவுரையின்படி பி. சுசீலா அதில் பங்குபற்றவில்லை. 

இந்நிலையில் தமிழக அரசின் இயல் இசை நாடக மன்ற அதிகாரிகள் பி. சுசீலாவின் வீட்டிற்குச் சென்று சந்தித்து சிறப்பு கலைமாமணி விருதை வழங்கினர்.