பசறை 13 ஆவது மைல் கல்லருகே கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்ற தனியார் பஸ் விபத்தில் பெற்றோரை இழந்த மூன்று பிள்ளைகளையும் தத்தெடுக்க வைத்தியர் ஒருவர் முன்வந்துள்ளார்.

அம்பாறை அரசினர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் வஜிர ராஜபக்சவே, பெற்றோரை இழந்த மூன்று பிள்ளைகளை தாம் பொறுப்பேற்பதற்கு முன்வந்துள்ள நிலையில், சட்டரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குறித்த வைத்தியர் பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வைத்தியரின்  கோரிக்கையை பசறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பதுளை மஜிஸ்ரேட் நீதிபதியின் கவனத்திற்குகொண்டுவந்துள்ளார்.

விபத்து இடம்பெற்ற தினமான கடந்த 20 ஆம் திகதி, லுணுகலையைச் சேர்ந்த அடாவத்தை தோட்டத்தின் அந்தோனி நோவா தமக்கான கண் சிகிச்சையை மேற்கொள்ள தனது மனைவியான பெனடிக் மடோனாவுடன், பதுளை அரசினர் வைத்தியசாலைக்கு பயணித்தார்.

அன்று காலையில் பதுளை செல்லும் பஸ் நேரத்துடன் சென்றுள்ளதை அறிந்ததும், அவ்விருவரும் ஆட்டோவொன்றில் புறப்பட்டு, தவறவிட்ட பஸ்ஸை வழிமறித்து அதில் ஏறி வைத்தியசாலைக்கு பயணித்தனர். அப்போது அந்த பஸ் பசறை 13 ஆவது மைல் கல் அருகே விபத்துக்குள்ளாகியது. அவ்விபத்தில் அந்தோனி நோவா மற்றும் அவரது மனைவியான பெனடிக் மடோனா உள்ளிட்டு 15 பேர் பலியாகினர்.

இத்தம்பதியினரின் இரு பெண்பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையுமாக மூன்று பிள்ளைகளும் தமது பாட்டியின் அரவணைப்பிலேயே தற்போது இருந்து வருகின்றனர். 

அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருந்து வரும் நிலையில், வைத்தியர் வஜிர ராஜபக்சவும், அவரது மனைவி தரங்கா விக்கிரமரட்னவும், விபத்தில் பெற்றோரை இழந்த 9, 8, 3 வயதுகளையுடைய மூன்று பிள்ளைகளையும் சட்ட ரீதியாக தத்தெடுத்து பொறுப்பேற்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.