ஜெனிவா பிரேரணையை நிராகரிக்கிறோம் : உள்ளகப் பொறிமுறையின் ஊடாக விசாரணைகள் - தினேஷ் குணவர்தன

Published By: Digital Desk 3

26 Mar, 2021 | 10:40 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக  நிறைவேற்றப்பட்டுள்ள புதிய தீர்மானமானது இலங்கையின் இறைமைக்கும்,சுயாதீனத்திற்கும் எதிரானதுடன், நாட்டில் ஸ்திரமற்ற அரசியல் நிலைமை ஒன்றை உருவாக்கி  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு நெருக்கடியை கொடுக்கும் நோக்கத்திலேயே பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன சபையில் தெரிவித்தார்.

மனித உரிமைகள் பேரவையில் பிரேரணையை முழுமையாக நிராகரிப்பதுடன்  உள்ளகப் பொறிமுறையின் ஊடாக விசாரணைகளை மேற்கொள்வோமெனவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, நடைபெற்று முடிந்துள்ள ஜெனிவா கூட்டத்தொடரின் இலங்கை தொடர்பிலான பிரேரணை குறித்து வெளிவிவகார அமைச்சின் விசேட அறிவிப்பை அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று சபையில் விடுத்தார். 

இதன்போது அவர் கூறுகையில்,

உலகின் மிகவும் மோசமான பயங்கரவாத அமைப்பை தோற்கடிக்க பல்வேறு அரசாங்கங்கள் முயற்சித்தாலும், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மூலமாக விடுதலைப்புலிகள் பயங்கரவாதத்தை முழுமையாக தோற்கடித்து இந்த நாட்டு மக்களின் உயிர்வாழும் உரிமையை பெற்றுக்கொடுத்தோம்.

மனித உரிமைகள் பற்றி இன்று பேசும் நபர்கள் அப்போதைய காலகட்டத்தில் மக்களின் உரிமைகள் பறிபோய், வாழ முடியாத பயங்கரமான சூழல் நிலவிய நிலையில் அதனை மறைத்து,விடுதலைப்புலிகளின் நிருவாக முறையொன்றை உருவாக்கிக்கொள்ள முடியும் என்ற நோக்கத்தில் ஒற்றையாட்சி முறையை நிராகரித்து தனி ஈழ இராச்சியத்தை உருவாக்கிக்கொள்ளும் நோக்கத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒத்துழைப்பு வழங்கிய நபர்கள் இன்றும் வேறு வழிகளில் முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

மனித உரிமைகள் குறித்து பேசும் நபர்கள் இந்த நாட்டில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதை விரும்பவில்லை என்பதும் வெளிப்பட்டுள்ளது. அதன் வெளிப்பாடே  2012,2013,2014 ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு எதிரான பிரேரணைகளை கொண்டுவர காரணமாக அமைந்தது. எனினும் எமது இராணுவம் மனிதாபிமான ரீதியில் செயற்பட்டனர். 

மூன்று இலட்சம் பொதுமக்களை பிரபாகரனிடம் இருந்து காப்பற்றி அமைதியான சூழலில் அவர்களை வாழ வைத்தோம். எமது தாய்நாட்டை பாதுகாக்க இராணுவத்தின் மூலமான சேவையை எவரும் மறந்துவிடக்கூடாது. அதுமட்டுமல்ல கைதுசெய்யப்பட்ட மற்றும் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு வழங்கி 12 ஆயிரம் பேரை  சமூகத்தில் மக்களுடன் வாழ அனுமதித்தோம். இன்று வடக்கு மக்களின் வாழ்க்கை சாதாரண நிலைக்கு வந்துள்ளது.

விடுதலைப்புலிகள் இந்த நாட்டில் மிகவும் மோசமான பயங்கரவாத அமைப்பாக மாற்றம் பெற்றது, அதன் பின்னர் எமது நாட்டின் ஜனாதிபதியை கொலை செய்தனர், இலங்கைக்கு அப்பால் சென்று இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தனர். 

இந்த நாட்டில் ஜனநாயக ரீதியில் செயற்பட்ட அரசியல்வாதிகள் பலரை கொலை செய்தனர். எம்முடன் இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர்கள் சகலரையும் கொலை செய்தனர். இவ்வாறான அராஜக இயக்கத்தை தோற்கடிக்க முடிந்த காரணத்தினால் தான் இன்று நாடாக பிளவு படாது ஜனநாயகத்தை வென்றெடுத்து ஒன்றிணைந்து பயணிக்க முடியுமாக உள்ளது.

எனினும் வெவ்வேறு நாடுகளில் உள்ள சிறுசிறு அமைப்புகள் தமது அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுத்து இலங்கைக்கு எதிராக செயற்பட கூறுகின்றனர். எனினும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் அமைப்புகளுடன் நீண்டகால உறவை இலங்கை கையாண்டு வருகின்றது. 

எமது அரசாங்கத்திற்கு கிடைத்த ஆணைக்கு அமைய நாம் 2015  இணை அனுசரணையுடன் கொண்டுவரப்பட்ட ஜெனிவா பிரேரணையில் இருந்து விலகிக்கொள்வதாக நாம் அறிவித்தோம். ஏனெனில் இந்த பிரேரணை நாட்டின் இறையாண்மை, நல்லிணக்கம், அரசியல் அமைப்பிற்கு முரணானது. 

பல்வேறு நாடுகளிடம் இருந்து எம்மை துருவப்படுத்தும் செயற்பாடாகும், அத்துடன் நாட்டில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் இராணுவத்திற்கு எதிரான நகர்வை இது முன்னெடுக்கும் எனவும் நாம் கருத்தில் கொண்டு பிரேரணையை நிராகரிக்க நடவடிக்கை எடுத்தோம். எந்தவொரு வெளிநாட்டு நீதிப்பொறிமுறையும் எமது சுயாதீன நீதி சேவையில் தலையிட இடமளிக்க முடியாது. ஆனால் இணை அனுசரணை பிரேரணை இவை அனைத்தையும் செய்கின்றது.

அதுமட்டுமல்ல ஒரு சில நாடுகளின் தேவைக்காக மாத்திரமே இந்த பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது, உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பில் மனிதவுரிமைகள் பேரவையில் காரணிகளை முன்வைக்க முடியாது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசை சிக்கலுக்கு உள்ளாக்கும் நோக்கிலும் நாட்டில் ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலைகளை உருவாக்குவதும் தீர்மானத்தின் நோக்கமாகும். 

புவியியல் ரீதியாக தமது அரசியல் நோக்கங்களை அடைந்துக்கொள்வதற்கான சில நாடுகள் பலவீனமான நாடுகளை மனிதவுரிமை விவகாரங்களின் ஊடாக நசுக்குவதற்கு முற்படுவதே மனிதவுரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள். இலங்கைக்குச் சார்ப்பாக வாக்களித்த நாடுகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இலங்கையின் உண்மையான நட்பு நாடுகள் தீர்மானத்தின் வாக்கெடுப்பில் பங்கேற்காமலும் இருந்தன.

யுத்த காலகட்டத்தில் ஏதேனும் தவறுகள் ஏற்பட்டிருப்பின் பாதிக்கப்பட்டவர்கள் சகலரும் முறைப்பாடுகளை செய்து விசாரணைகளை முன்னெடுத்து தீர்வு வழங்கும் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதையும் நாம் பேரவையில் தெரிவித்தோம். விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தில் எவரும் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்றால் அவர்கள் அது குறித்து ஆராயப்படும், அதேபோல் எவரேனும் காணாமல் போயிருந்தால் அவர்கள் பிரித்தானியாவில் பிரஜாவுரிமையை பெற்றுக்கொள்ளவில்லை என்றால் அவர்கள் குறித்து ஆராய முடியும். ஏனென்றால் பிரித்தானியாவில் பிரஜாவுரிமை பெற்ற நபர்களின் பட்டியலை இன்னமும் பிரித்தானியா எமக்கு வழங்கவில்லை. எனவே குற்றச்சாட்டுக்கள் இருப்பின் ஆதாரங்களுடன் எமக்கு முன்வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாகாணசபை தேர்தலை நடத்தவில்லை, அதேபோல் இலங்கை கொவிட் -19 நிலைமைகளை கையாள தெரியாத நாடாகவும் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். ஆனால் உலகில் கொவிட் -19 நிலைமைகளை சரியாக கையாண்ட நாடுகளில் நாம் உயரிய இடத்தில் உள்ளோம். மாகாணசபை தேர்தலை நடத்தாது இருக்கவும் இதுவே காரணமாகும். இலங்கையின் நிலைமைகளை முறையாக தெரிந்துகொள்ளாது,தரவுகளை சேகரிக்காது அர்த்தமற்ற அறிக்கைகளை ஆணையாளர் வெளியிட்டு வருகின்றார். 

எவ்வாறு இருப்பினும் இம்முறை வாக்கெடுப்பில் 47 நாடுகள் பங்குபற்றிய நிலையில் 22 நாடுகள் பிரேரணைக்கு ஆதரவாகவும், 11 நாடுகள் எதிராகவும் வாக்களித்தனர். 14 நாடுகள் நடுநிலையாக செயற்பட்டனர். எனவே ஒட்டுமொத்தமாக இந்த பிரேரணைக்கு பெரும்பான்மை ஆதரவு இல்லை. எவ்வாறு இருப்பினும் இந்த பிரேரணையை முழுமையாக நிராகரிப்பதாக அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.

 ஏனெனில் இது பக்கசார்பானதும் இந்த பிரேரணைக்கு பின்னால் அரசியல் நகர்வுகள் உள்ளதாகவும் கருதுகின்றோம். அத்துடன் ஒருதலைப்பட்சமான தீர்மானமாக கொண்டுவரப்பட்டதும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கட்டளைகளை மீறிய வகையிலும், பொய்யான ஆதாரங்களை கொண்டும் உருவாக்கப்பட்ட இந்த பிரேரணையை  முழுமையாக நாம் நிராகரிக்கின்றோம். எனவே எமது இறையாண்மை, பாதுகாப்பை உறுதிப்படுத்த எமக்குள்ள ஒரே வழிமுறை இந்த பிரேரணையை நிராகரிப்பது மட்டுமேயாகும்.

இந்த அறிக்கையை இரண்டாக பிரித்து பார்க்க முடியும். ஒன்று விடுதலைப்புலிகளுடன் இடம்பெற்ற மோதலில் அவர்கள் தோற்கடிக்கப்பட்ட காலகட்டத்தில் ஏற்பட்டதாக கூறப்படும் இன அழிவுகள் குறித்த விசாரணை நடவடிக்கைகள், இரண்டாவதாக இலங்கையில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக்கொண்டு முன்னைய அரசாங்கத்தை தோற்கடித்து.

 இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவாகி எமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை பாதுகாத்துள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் ஆட்சி முறைமை குறித்த விமர்சனங்களாகும். இந்த விடயங்கள் நாட்டின் உள்ளக செயற்பாடுகளில் மனித உரிமைகள் பேரவைக்கு காரணிகளை கூறவும் அல்லது அறிக்கையிடும் முறைமை இதுவல்ல. ஒரு சிலர் இங்கிருந்து கூறிய காரணிகள் அறிக்கையில் பார்க்க முடிகின்றது. ஆகவே இது நாட்டினையும் ஜனாதிபதியையும் பலவீனப்படுத்த எவ்வாறு இணைந்து செயற்பட்டுள்ளனர் என்பதை அவதானிக்க முடிகின்றது.

அதேபோல் அதிகளவிலான பணத்தை செலவழித்து இந்த பிரேரணையை நிறைவேற்றிக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த பணத்தை யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு கொடுத்து, அவர்களுக்கான வீடுகளை அமைத்துக்கொடுக்க நடவடிக்கை எடுத்திருந்தால் ஆரோக்கியமானதாக இருந்திருக்கும். எனவே தவறான தரவுகளும், பொய்யான சாட்சியங்களையும் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு சில நாடுகளின் தேவைக்காக கையாளப்படும் இந்த பிரேரணையை நாம் முழுமையாக நிராகரிக்கின்றோம். 

இன்று உலகில் நூறுக்கும் அதிகமான நாடுகள் கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒரு தடுப்பூசியை கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். இந்த காலகட்டத்தில் மனிதாபிமானமாக செயற்படும் அவசியம் உள்ள நிலையில் ஒரு நாட்டின் இறையாண்மையை பலவீனப்படுத்தும் வேலைகளை மனித உரிமைகள் பேரவை முன்னெடுத்து வருகின்றது.

அதேபோல் எமக்கு ஆதரவாக வாக்களித்த எம்மை ஆதரித்த எமது உண்மையான நட்பு நாடுகள்  அனைவருக்கும் நாம் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும் இலங்கை உள்ளக பொறிமுறையை கையாண்டு நாட்டின் நல்லிணக்கத்தையும் அமைதியையும் உருவாக்கி நாட்டினை ஒன்றிணைக்கும் நடவடிக்கையை கையாள்வோம்.

 நிலையான அபிவிருத்தி இலக்கை நோக்கிய எமது பயணத்தையும் நாம் முன்னெடுப்போம். 47 ஆம் கூட்டத்தொடரில் அறிக்கை தொடர்பிலான காரணிகளும், எழுத்து மூலமான அறிக்கை 59 ஆம் கூட்டத்தொடரிலும்  முன்வைக்கப்படும். எனவே நீண்ட பயணம் ஒன்றினை முன்னெடுக்க வேண்டியுள்ளது என்றார். 

--

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31