மஹிந்தவின் செயற்பாடே இந்த நிலைமைக்கு காரணம் -  ஐ.தே.க. தெரிவிக்கும் காரணம் இது தான் !

26 Mar, 2021 | 07:08 AM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

2009 ஆம் ஆண்டு  ஜனாதிபதியாகவிருந்த மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபை செயலாளருடன் உடன்படிக்கை செய்யாமல் இருந்திருந்தால், நாம் இன்று  இந்த நிலைமைக்கு முகங்கொடுக்காமல் இருந்திருக்க முடியும். 

எமது நாட்டு மக்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிற்கச் செய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

ஐ.தே.க. தலைமையாகமான சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையில் 14 வாக்குகள் மாத்திரமே இலங்கை சார்பாக கிடைத்தன. 

அயல் நாடுகளான இந்தியா, நேபாளம் போன்றவற்றின் ஆதரவைக்கூட இந்த அரசாங்கத்தினால் பெற முடியாமல் போயுள்ளது. அயல் நாடுகளுடன் சிறந்த வகையில் உறவுகளை பேண வேண்டும்.

2009 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதியாகவிருந்த மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபை செயலாளருடன் உடன்படிக்கை செய்திருந்தது. 

அந்த ஒப்பந்தம் செய்யாமல் இருந்திருந்தால், நாம் இன்று இந்த நிலைமைக்கு முகங்கொடுக்காமல் இருந்திருக்க முடியும். எமது நாட்டு மக்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிற்கச் செய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.

இந்த உடன்படிக்கையின் மூலமாக எங்களின் பொறுப்புகளை உள்ளன பொறிமுறையொன்றின் மூலமாக செயற்படுத்வோம் என 2015 இல் ஆட்சி அமைத்தபோது நாம் உறுதியளித்தோம்.  

சர்வதேச சமூகத்துடனான உறவுகள் மூலமாக, ஐக்கிய நாடுகள் சபையால் 2015 இல் தெரிவிக்கப்பட்ட பரிந்துரைகளை செயற்படுத்துவதாக நாம் உறுதியளித்தோம். 

ஐ.நா. மனித உரிமை பேரவையும் அதற்கான தமது பூரண ஆதரவை எமக்கு வழங்கியிருந்தனர். 

எமது நாட்டில் காணப்படுகின்ற நீதிமன்ற கட்டமைப்பின் ஊடாக உள்ளக பொறிமுறை செயற்படுத்தியிருந்தோம். இதற்கு சர்வதேசத்தின் எந்தவொரு தலையீடும் இருக்கவில்லை. ஆனால் தற்போது அவ்வாறில்லை.

எமது நாட்டை மற்ற நாடுகளுக்கு வாடகைக்கு கொடுக்காது, எம்மை நாமே ஆட்சி புரியும் அரசாங்கமொன்றை அமைக்க வேண்டும். 

மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின்போது இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை 2017 ஆம் ஆண்டு எமது ஆட்சி காலத்திலேயே நீக்கப்பட்டது. 

இதன் பயனாக 2023 ஆம் ஆண்டு வரை ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை எமக்கு கிடைக்கச் செய்வதற்கு ஐக்கிய தேசிய கட்சியே பிரதான காரணமாகும்” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right