கொழும்பில் இருந்து காத்தான்குடிக்கு இலங்கை போக்குவரத்து பஸ்ஸில் ஹரோயின் போதை பொருள் கடத்திய பயணி ஒருவரை மட்டக்களப்பு நாவலடி பிரதேசத்தில் வைத்து இன்று வியாழக்கிழமை (25) மாலை கைது செய்ததுடன், அவரிடமிருந்து 5 கிராம் 20 மில்லிக்கிராம் போதைப்பொருளை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய சம்பவதினமான இன்று மாலை வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி பிரதேசத்தில் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன் போது கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற இலங்கை போக்குவத்து பஸ்ஸை பொலிசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது அதில் 5 கிராம் 20 மில்லிக்கிராம் ஹரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற புதிய காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த  32 வயதுடைய ஒருவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருவதுடன் அவரை வாழைச்சேனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.